கொலையாளிகள் சுதந்திரமாக இருக்கும் இலங்கையில் ஊடக சுதந்திரம் மிகக் குறைவு

0
Ivory Agency Sri Lanka

ஊடகவியலாளர்களின் படுகொலைகளை தண்டிக்காமல் தொடர்ந்து நழுவிச் செல்லும் போக்கானது, இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு ஒரு பெரிய தடையாக இருப்பதை,
ஊடக சுதந்திரத்திற்காக செயற்படும் ஒரு அமைப்பு மே 3ஆம் திகதி சர்வதேச ஊடக சுதந்திரத் தினத்தில் உலக மக்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் (JDS) அமைப்பின் இணை அமைப்பான, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு (RSF) 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்த வருடமும், கடந்த வருடத்தைப் போன்று 127ஆவது இடத்தில் சிவப்பு வலயத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்தது 44 என இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு சேகரித்த தகவல்களை எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு மேற்கோளிட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு தண்டனை விதிக்கப்படாமை இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் தடையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சுற்றிவளைப்புகள், விசாரணைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான பொலிஸ் துன்புறுத்தல் அலை வீசத் தொடங்கியுள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கூறியுள்ளது.

“உள்நாட்டுப் போரின் முடிவு மற்றும் தமிழ் கிளர்ச்சியை நசுக்கிய 10ஆவது ஆண்டு நிறைவான 2019ஆம் ஆண்டு, இலங்கையில் சிறுபான்மையினர் தொடர்பில் அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு 2020ஆம் ஆண்டில் பலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடம் நவம்பரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட Battinews.com புகைப்பட ஊடகவியலாளர் கோகுலன் என அழைக்கப்படும் முருகபிள்ளை கோகுலதாசன் இதுவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

அதே மாதத்தில் முல்லைத்தீவில் ஏற்பட்ட பேரழிவை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் கனபதிபிள்ளை குமணன் ஆகியோர் காட்டில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர், அதேவேளை, குற்றவாளிகள் பொலிஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளால் பாதுகாக்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் மனித உரிமை மீறல்களை எதிர்த்து கிழக்கில் இருந்து வடக்கு நோக்கிச் சென்ற பேரணியின் பின்னர், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் புண்யமூர்த்தி சஷிகரன் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

இந்த வருடம் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட ‘டியூப் தமிழ்’ யூடியூப் தளத்தின் முகுந்தன் சிவன்யா மற்றும் விமல்ராஜ் ஆகியோரை பயங்கரவாத தடுப்பு பொலிஸார் கைது செய்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.

குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் மார்ச் மாதம் சித்திரவதை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுஜீவ கமகே அளித்த வாக்குமூலத்தைவலுக்கட்டாயமாக மாற்றியமைத்ததாக பொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் 2021 சர்வதேச குறியீட்டின்படி, நோர்வேயில் ஊடக சுதந்திரம் சிறப்பாக காணப்படுவதாகவும், வட கொரியா மிகமோசமான பெறுபேற்றை காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments