கடலால் சூழப்பட்ட இலங்கையின் மீன்பிடி ஆறில் ஒரு பங்காக குறைந்துள்ளது

0
Ivory Agency Sri Lanka

நாட்டைச் சுற்றி பெருங்கடலை கொண்டுள்ள இலங்கையில் வருடாந்த மீன்பிடியின் அளவு எண்பதுகளுடன் ஒப்பிடும்போது சுமார் ஆறில் ஒரு பங்காக குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இலங்கையின் வருடாந்த மீன்பிடி 1980இல் 300,000 தொன்களாக இருந்ததாகவும், 2018இல் அது 53,000 தொன்களாக குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள, சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர வருடாந்தம் கடல் நீரில் சேரும் மைக்ரோபிளாஸ்டிக்கின் (நுண்ணிய நெகிழித் துண்டுகள்) அளவு அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“நம் நாட்டின் தென் பகுதி கடலில் எடுக்கப்பட்ட 60 நீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 70 சதவீதம் மைக்ரோபிளாஸ்டிக் கலந்துள்ளமை தெரியவந்துள்ளமை மற்றுமொரு காரணமாகும்”

இந்த நிலைமை கடல்களுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கும் பொதுவானது என்பதை அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

லலித் சேனாநாயக்க என்ற தொழில்முறை கலைஞரால், கடற்கரையில் வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் கழிவுகளைப் பயன்படுத்தி, உருவாக்கப்பட்ட சிலையை பார்வையிடும் வகையில் வருகைத்தந்து கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

12 அடி உயரம், 15 அடி நீளமும் உடைய குறித்த ‘குப்பை யானை”யை உருவாக்குவதற்கு, அமெரிக்கத் தூதரகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சர்வோதய ஆகியன அனுசரணை வழங்கியுள்ளன.

பிளாஸ்டிக் மற்றும் பொலிதீனை கடலுக்குள் கலக்கச் செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளதாக, சர்வதேச அமைப்புகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர், அனைத்து மக்களும் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கடலுடன் கலப்பதை குறைக்கும் வகையில் செயற்பட வேண்டும் என கூறியுள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், திக்கோவிட்ட மீனவர்களுடன் இணைந்த பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டமையையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நான் மூன்று வருடங்கள் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றினேன். ஒரு நாளுக்கு சுமார் 24,000 பிளாஸ்டிக் போத்தல்கள் கடலில் இருந்து டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன. சிறிய பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீரை எடுத்துச் செல்வது கூட தடைசெய்யப்பட்டது. ”

புதல்வியின் சிந்தனை

கலைஞர் லலித் சேனாநாயக்க மேற்கொண்ட பணிகளைப் பாராட்டிய அமைச்சர், இந்த படைப்பிற்கான சிந்தனை கலைஞரின் புதல்விக்கு சொந்தமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

“அவருக்கு இந்த சிந்தனை அவரது சிறிய புதல்வி கொடுத்தது. நம் பிள்ளைகள் சுற்றுச்சூழலை நேசிக்கும் வகையில், பெரியவர்கள் முன்மாதிரியாக வாழ வேண்டும். ஆனால் நம் நாட்டின் பழைய தலைமுறை இன்று நம் சூழலுக்கு செய்து வரும் அழிவைக் காணும்போது நாம் உண்மையில் வெட்கப்பட வேண்டும்.”

கலைஞர் லலித் சேனாநாயக்கரின் பணியின் பிரதிபலிப்பு பூமியில் ஒரு சோகம் என அமைச்சர் விபரித்தார்.

“இந்த படைப்பின் ஊடாக லலித் சேனாநாயக்க வெளியிட்ட கருத்து பூமியில் ஒரு சோகமாகவே என நான் காண்கிறேன். நம் நாட்டில் ஏராளமான காட்டு யானைகள் ஒவ்வொரு ஆண்டும் பொலிதீனை சாப்பிடுவதால் உயிரிழக்கின்றன.” என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக, அரச தனகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

Facebook Comments