எல்லை மீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காவிடின் கடலில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாமல்போகும் என தமிழ் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்திய இழுவைப் படகுகள் எல்லைமீறி இலங்கையின் வடக்கு கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து, வடக்கு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அத்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் இந்திய இழுவைப் படகால் சாகப்போகின்றோம். இது தொடர் போராட்டமாகத்தான் மாறப்போகிறது. ஒருசில நாட்களில் முடிவு தராவிட்டால், ஒரு சில நாட்களில் முடிவு தரவேண்டும். தராத பட்சத்தில் தொடர் போராட்டம் ஒன்று நடக்கும். கடலில் அசம்பாவிதங்களும் நடக்கும்”
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை முற்கையிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்கள் நேற்று (20) போராட்டத்தை முன்னெடுத்தன.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்தக் கோரி, “இந்திய அரசே எமது கடல் வளத்தை சூறையாடாதே எம்மையும் வாழ விடு” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மருதடி வீடியின் சந்தியில் இருந்து ஆரப்பமான மீனவர்களின் பேரணி துணை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை அடைந்தபோது, பொலிஸார் அவர்களை அலுவலகத்திற்குள் செல்ல முடியாதவாறு தடுத்ததோடு, கடற்றொழில் அமைப்புக்களின் எட்டு பிரதிநிதிகள் மாத்திரம் இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஜே. ராகேஷ் நட்ராஜை சந்திக்க அனுமதித்தனர்.
இந்திய துணை உயர்ஸ்தானிகரிடம் தமது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்திய மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கைகள் அடங்கிய மஜரையும் கையளித்தனர்.
இதேவேளை, இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதில் இலங்கைப் கடற்படையினரின் அசமந்தப் போக்குத் தொடர்பிலும் மீனவர் சங்கத் தலைவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
“எமது கடற்படையிடம் நாங்கள் தாழ்மையாக கேட்டுக்கொள்வது, தங்களால் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் எங்களுக்கு பூரண திருப்தியை அளிக்கவில்லை. கைதுகள் மேலும் தொடர வேண்டும். கைதுகள் பெரியளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு நீங்கள் செயற்படும்போது எமது மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், துன்பங்களை கலைவதற்கும் அது உறுதுணையாக அமையும்.” என போராட்டத்தில் பங்கேற்ற, யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீகந்தவேல் புனிதப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சீன ஆதிக்கமும், இந்தியத் தூதுவரும்
இலங்கை மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் சீனாவின் கடலட்டைப் பண்ணைகள் தொடர்பில் இலங்கையில் ஏன் எவரும் கேள்வி எழுப்புவதில்லை என இந்திய உயர்ஸ்தானிகர் எச். ஈ. சந்தோஷ் ஜா வட மாகாணத் தமிழ் எம்.பிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச். ஈ. சந்தோஷ் ஜா வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை, யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி கலந்துரையாடியிருந்தார்.
இந்த சந்திப்பில் பங்கேற்ற தன்னிடம், உயர்ஸ்தானிகர் இந்தக் கேள்வியை எழுப்பியதாக, சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனிடம் தெரிவித்திருந்தார்.
“இங்கு இருக்கின்ற கடலட்டைப் பண்ணைகள் பற்றி சீனாவின் வருகையின் மூலமாக கடலட்டைப் பண்ணைகள் செய்யப்படுவது அதுவும் எங்களது மீனவர்களின் விடயங்களைப் பாதிக்கின்ற விடயங்கள் பற்றி பெரிதாக பேசப்படுவதை தான் கேட்க முடிவதில்லை எனச் சொன்னார். நாங்களும் அதற்கான விளக்கங்களைச் சொன்னோம். பல இடங்களிலே எமது மீனவர்கள் தொழில் செய்ய முடியாத அளவுக்கு அந்தக கடல் படுக்கை குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.”
இதேவேளை, வட மாகாணத்திற்கான தனது விஜயத்தின்போது மன்னார் மாவட்டத்திலுள்ள மீனவ சமூகங்களுக்கு உறை குளிர்சாதனப்பெட்டிகளை வழங்கிய இந்திய உயர்ஸ்தானிகர் எச். ஈ. சந்தோஷ் ஜா இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் பிரிதொரு சந்தர்ப்பத்தில் கலந்துரையாடுவதாக தெரிவித்ததாக மன்னார் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.