மிருசுவில் படுகொலையாளியை விடுவித்தமைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

0
Ivory Agency Sri Lanka

தமிழ் மக்களை படுகொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட இராணுவச் சிப்பாயை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமைக்கு எதிராக அதியுயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐந்து வயது குழந்தை உட்பட எட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தீர்மானத்தை இரத்துச்செய்யுமாறு மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ளனர்.

ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, வில்வராஜா பிரசாத், நடேசு ஜெயச்சந்திரன், கதிரன் ஞானச்சந்திரன் மற்றும் அவரது மகனான ஞானச்சந்திரன் சாந்தன் ஆகியோர் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதம நீதியரசர் நளின் பெரேராஇ நீதியரசர்கள் புவனேக அலுவிகாரஇ சிசிர டி ஆப்ரூஇ பிரியந்த ஜெயவர்த்தனஇ முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு மிகவும் பாரதூரமானது என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ரத்நாயக்க முதியன்சலாகே சுனில் ரத்நாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானம் வெளிப்படையானது அல்லவெனவும் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்லவெனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், இந்த வழக்கில் சாட்சியமளித்தவர்கள் மிரட்டப்படுவதுடன், பாரபட்சம் காட்டபப்டுவதாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோதம்

மிருசுவில் படுகாலை சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட ரத்நாயக்க முதியன்சலாகே சுனில் ரத்நாயக்கவை விடுதலை செய்யும் ஜனாதிபதியின் தீர்மானம் சட்டத்திற்கும் அரசியலமைப்பும் முரணானது என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பை மீறியுள்ளது என தீர்ப்பளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.

குற்றவாளியை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் குற்றவாளியின் விடுதலை தொடர்பான ஏனைய அடிப்படை ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியால் ரத்நாயக்க முதியன்சலாகே சுனில் ரத்நாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஆணையை இரத்துச் செய்ய வேண்டும் என மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து உயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் சிறைச்சாலையில் நெரிசலை குறைக்கும் வகையில் சிறிய குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுவிக்க கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்திய பின்னணியில் ஐந்து வயது குழந்தை உட்பட எட்டு தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கஜபா ரெஜிமெண்ட் இராணுவ சிப்பாய் ஆன ரத்நாயக்க முதியன்சலாகே ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் எம்.ஏ.சமன் குமார மற்றும் கல்கமுவ உஸ்கல சியம்பலாகமுவ கே.எல்.டி அசங்க புஷ்பகுமார ஆகியோர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

Facebook Comments