இலங்கையின் சிவில் நிர்வாகம் இராணுவ மயமாக்கப்படுகிறது: ஐடிஜேபி, ஜேடிஎஸ் சாடல்

0
Cartoon by - Awantha Artigala
Ivory Agency Sri Lanka

இலங்கையின் சிவில் நிவாக சேவைகளின் முக்கியப் பொறுப்புகளில் ஏராளமான சிவில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டத்தின் (ஐடிஜேபி) செயல் இயக்குநர் யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விரிவான பட்டியலை ஐடிஜேபி மற்றும் இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் (ஜேடிஎஸ்) ஆகியவை இணைந்து பிரிவு வாரியாக வெளியிட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக 39 இராணுவ அதிகாரிகள் முன்னாள் இராணுவ அதிகாரியான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆட்சியில் முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

“இந்த நடவடிக்கை மெல்ல மெல்ல நிர்வாகத்தைக் கையிலெடுப்பதாகும்“ என்று யாஸ்மின் சூக்கா ஜேடிஎஸ்ஸுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு அப்பாற்பட்டு ஜனாதிபதியிடம் அதிகாரக் குவிப்பு, குடும்பத்தாருக்குப் பதவிகள், துதிபாடுபவர்களுக்குச் சலுகைகள் மட்டுமின்றி அதிர்ச்சியளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஏராளமான நபர்களுக்கு அரச பதவிகள் அளிக்கப்பட்டுள்ளடுள்ள என்கிறார் சூக்கா.

மேலும் “இது கள்ளத்தனமாக சதிப் புரட்சி செய்யும் செயல், ஜனநாயகம் தொடர்ச்சியாக அரிக்கப்படுகிறது“ எனவும் ஐடிஜேபியின் செயல் இயக்குநர் கூறுகிறார்.

கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துதல், பொலிஸ், புலனாய்வுத் துறை, சிறைச்சாலைகள் திணைக்களம், வெளிநாட்டுக் கொள்கை, விமான நிலையம், துறைமுகம், சுங்கம், பயன்பாடுகள், விவசாயம், மீன்பிடி, நில வளர்ச்சி, வனஜீவராசிகள் பாதுகாப்பு இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு ஊழல் கண்காணிப்பு ஆணையத்திலும் அரசுக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

“அரச கட்டமைப்பு இதுவரை இல்லாத வகையில் இராணுவ மயமாக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற மற்றும் பணியிலுள்ள அதிகாரிகள் நிர்வாகப் பதவிகள், கட்சிப் பதவிகள் மற்றும் அமைச்சுப் பதவிகளில் கோலோச்சுகின்றனர்-இது உறுதியான வகையில் அரசின் சிவிலியன் தன்மையை முடிவுக்கு கொண்டுவருவதன் துவக்கமாக உறுதியாகத் தெரிகிறது“ என்கிறார் ஜேடிஎஸ் அமைப்பின் பாஷண அபேயவர்தன.

“இராணுவம் சொல்லொணா வகையில் நாட்டின் பொதுமக்களுக்கு எதிரான குற்றங்களை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்துள்ளது. எனவே அவர்கள் கையில் அதிகாரத்தை குவித்து நிர்வாகத்தை தமது பிடியில் வைத்துக் கொள்ள அனுமதிப்பது மாற்ற முடியாத ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் என்கிறார் பாஷண அபேயவர்த்தன.

Facebook Comments