அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழு விரைவில் இலங்கைக்கு விஜயம்

0
Ivory Agency Sri Lanka

புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் அடுத்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரையும் சந்திக்கவுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் மார்ட்டின் கெல்லி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை அமெரிக்காவிற்கு விஜயம் செய்து அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்க தூதரக அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

“தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டுப் பேச்சுவார்த்தையின் பின்னர், இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச கோரிக்கைகள் அடங்கிய பொதுவான ஆவணத்தை சர்வதேச சமூகம் சந்திப்போம்” என இதற்குப் பதிலளித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டுச் செயற்பாடுகள், மலையக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இலங்கையின் தேசியப் பிரச்சினையில் அமெரிக்காவின் வகிபாகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்காலக் கூட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் அமெரிக்காவுக்கான இரண்டாவது துணைத் தூதுவர் சூசன் வோல்க், அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெப்ரி சுனின், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், நிதித்துறைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார், பேராசிரியர் விஜயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, டிசம்பர் 13ஆம் திகதி கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள கடற்றொழில் அமைச்சுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் மார்ட்டின் கெல்லி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் மத்தியில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் ஒருங்கிணைந்த கொள்கையின் அவசியம் குறித்து கலந்துரையாடினார்.

தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீதிக்காக குரல் கொடுப்பவர்களுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமெரிக்க பிரதித் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கொழும்பில் கூடி எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments