10 வருடங்களுக்குப் பின்னர் காது கேளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்

0
Ivory Agency Sri Lanka

விசேட தேவையுடைய ஒரு குழு சார்பாக ஒரு தசாப்தத்திற்கு முன்னர் முதலாவது ராஜபக்ச ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த இரண்டாவது ராஜபக்ச ஆட்சி தீர்மானித்துள்ளது.

இலங்கையில் சைகை மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியாக நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஜனவரி 18, 2021 திகதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைய சைகை மொழி ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியாக அங்கீகரிப்பதற்காக 2010 செப்டெம்பர் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சைகை மொழியை ஒரு முறையான தகவல்தொடர்பு வழிமுறையாக அங்கீகரிப்பதற்கும், சைகை மொழியை முறையான தொடர்பாடல் ஊடகமாக அங்கீகரிப்பதற்கும், பொருத்தமான வகையில் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் தேவையான ஏற்பாடுகளை தயாரிப்பதற்கும், அதற்காக சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இலங்கையில் குறிப்பிடத்தக்களவு செவிப்புலனற்றவர்கள் வாழ்கின்றமையால், அவர்களுடைய கல்வி தேவைகள், சட்ட அணுகுமுறைகள், சுகாதார வசதிகள், பலதரப்பட்ட அரச சேவைகள் மற்றும் தனியார் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது சைகை மொழியை அங்கீகரிக்கப்பட்ட தொடர்பாடல் ஊடகமாக ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பதன் மூலம் செவிப்புலனற்ற சமூகத்தவர்களை வலுவூட்ட முடியும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை காது கேளாதோர் சங்கத்தின் தகவலுக்கு அமைய, நாட்டில் 300,000ற்கும் மேற்பட்ட காது கேளாதோர் உள்ளனர்.

காது கேளாதோருக்கான இலங்கை கிரிக்கெட் அணி 2018ஆம் ஆண்டில் காது கேளாதோருக்கான சர்வதேச கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்த அங்குரார்ப்பண இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், ஐந்து நாடுகளை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றது.

Facebook Comments