உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஹமாஸ் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே எகிப்து இஸ்ரேலுக்கு தகவல் தெரிவித்த விடயம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க காங்கிரஸின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் மைக்கேல் மெக்கோல் ஊடக சந்திப்பில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தது 1,200 இஸ்ரேலியர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களைக் கொன்ற மோதலைத் தூண்டிய ஹமாஸ் தாக்குதல் பற்றி தாம் அறிந்திருந்ததாக வெளியாகும் தகவலை இஸ்ரேல் மறுத்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த எச்சரிக்கை பற்றிய செய்திகளை ‘மொத்தமும் பொய்யான செய்தி’ என நிராகரித்துள்ளார்.
“சூழ்நிலை மிக விரைவில் பெரிய அளவில் வெடிக்கும் என நாங்கள் அவர்களை எச்சரித்தோம். ஆனால் அவர்கள் அத்தகைய எச்சரிக்கைகளை புறக்கணித்தார்கள்,” என ஒரு அநாமதேய எகிப்திய புலனாய்வு அதிகாரி கெய்ரோவில் உள்ள அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறியுள்ளார்.
“இதுபோன்ற ஏதாவது நடக்கலாம் என எகிப்து இஸ்ரேலை எச்சரித்ததை நாங்கள் அறிவோம்” என மைக்கல் மெக்கோல், மத்திய கிழக்கு போர் நிலைமை குறித்து அமெரிக்க காங்கிரஸின் உள்ளக சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாக, AFP தெரிவித்துள்ளது.
விளக்கமளிக்க வேண்டுமென ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமை ஊடகத் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இது அதற்கான நேரமில்லை என ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“முதலில் போர், பின்னர் விசாரணை” என அவர் கூறியுள்ளார்.
காசா எல்லையை அண்மித்த எகிப்து, அடிக்கடி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.