ஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் தனது பிடியைத் தளர்த்துகிறது

0
Ivory Agency Sri Lanka

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், உலகின் பார்வையில் விமர்சிக்கப்பட்ட ஒரு கொள்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது.

உலகின் பல பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட, மரண தண்டனையை அமுல்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு, இலங்கை மனித உரிமை சமூகத்தால் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

அதேவேளை, சிறைச்சாலை கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் நீண்ட காலமாக இலங்கைக்கு பரிந்துரைத்து வருகின்றன.

இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

1998ற்குப் பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தவிர ஏனைய கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் என சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அண்மையில் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடக செயலாளர் மாதவ வீரசிங்க ஜனவரி 19ஆம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தவிர, 1998 முதல் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மரண தண்டனையை மாற்றுவது குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு தீர்மானங்கள் நிலுவையில் உள்ள நிலையில், காவலில் வைக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு கைதிகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக நான்கு புதிய மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் விரைவில் அமைக்கப்படும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சிறிய போதைப்பொருள் மற்றும் பிற குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவதற்குப் பதிலாக, சமூக மறுசீரமைப்பு திணைக்களத்தின் கீழ் அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்தி சமூகமயப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் (சட்டம்) பியூமந்தி பீரிஸ், சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சின் (சிறப்பு திட்டங்கள்) மேலதிக செயலாளர், எச்.எம்.என்.சி தனசிறி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர், புனர்வாழ்வு மற்றும் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், கொழும்பு சிறைச்சாலை வளாகத்தை இடமாற்றம் செய்வதன் மூலம் ஹொரன பகுதியில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதிநவீன சிறைச்சாலை அமைப்பை விரைவுபடுத்துவதற்கும், அந்த இடத்தை ஆய்வு செய்வதற்கும் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகள் அங்கு விஜயம் செய்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் இந்த சந்திப்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலை பரிந்துரைகள்

மஹர சிறைச்சாலையில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதோடு, அதனை மீளாய்வு செய்து விரைவாக செயற்படுத்தக்கூடிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

11 கைதிகள் கொல்லப்பட்டதோடு 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைச்சாலையில் சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்கு நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா, நீதியமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் ரோஹன ஹபுகஸ்வத்த, சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் காமினி ஜயசிங்க, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஆர்.எல்.ரணவீர இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

மஹர சிறைச்சாலை படுகொலையில் 11 பேர் கொல்லப்பட்டதோடு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததோடு, உயிரிழந்த அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments