இலங்கை கடற்படையால் “நடுக்கடலில் நடத்தப்பட்ட படுகொலை“-இந்திய மீனவர்கள் கொந்தளிப்பு

0
Ivory Agency Sri Lanka

இலங்கையில் நடைபெற்ற போரிலிருந்து தப்பித்து தமிழகம் சென்ற அகதியொருவர் கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

கடற்படையினர் கடந்த திங்கட்கிழமை இரவு தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில் அந்தப் படகு மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்த நால்வரும் படுகொலை செய்யப்பட்னர். அதில் நீண்ட காலமாக மண்டபம் பகுதியிலுள்ள அகதிகள் முகாமிலிருந்த சாம் நேசபெருமாளும் அடங்குவார்.

இந்தத் தாக்குதல் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பையும் கோபாவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியிலிருந்து புறப்பட்ட படகுகளில் ஒரு தொகுதியினர் இலங்கை கடற்பரப்பில் நெடுநீதிவுக்கு அருகில் தமது வலைகளை விரித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையின்

அதிவிரைவுப் படகுகள் அந்தப் படகுகளை இந்தியக் கடற்பகுதிக்குள் விரட்டும் நோக்கில் மோதி தாக்க முற்பட்டனர். அவ்வகையில் ஒரு படகின் மீது வேகமாக மோதியதில் நான்கு மீனவர்களுடன் அந்தப் படகு மூழ்கியது.

மூழ்கடிக்கப்பட்ட படகில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மெசியா அந்தோனி ராஜ், உச்சிப்புளியைச் சேர்ந்த நாகராஜ் வெள்ளைச்சாமி மற்றும் செந்தில்குமார் செல்வம் ஆகியோருடன் சாம் நேசபெருமாளும் கடலுக்குச் சென்றிருந்தார்.

இதில் இருவரது உடல்களும் மூழ்கடிக்கப்பட்ட படகும் புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் இருவரது சடலங்களைத் தேடும் பணி தொடருகிறது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

இந்தச் சம்பவம் “நடுக்கடலில் நடத்தப்பட்ட படுகொலை“ என்கிறார் ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத் தலைவர் ஜேசுராஜா.

தமது கடற்பரப்புக்கு வந்த படகுகளை மடக்கிப் பிடிக்க முனைந்த போது தமிழக மீனவர்களின் படகுகள் தமது படுகளை முரட்டுத்தனமாக செலுத்தியதில் அது இலங்கை கடற்படையின் அதிவேக கப்பல் ஒன்றுடன் மோதியது என்றும் அதனால் நிலைகுலைந்த படகு கடலில் மூழ்கியது என்றும் இலங்கை கடற்படை பேச்சாளர் கூறுவது அடிப்படையற்றது என ஜேசுராஜா கூறுகிறார்.

இந்தச் சம்பவத்தில் தமது படகொன்று சேதமடைந்தது என்று இலங்கை கடற்படை தனது இணையதளத்தில் கூறியுள்ளது. அது குறித்து கேள்வியெழுப்பிய ஜேசுராஜா“40 அடி நீளம் கொண்ட மரப்படகு எப்படி எஃகில் செய்யப்பட்ட கடற்படைப் படகின் மீது மோதி அதை சேதப்படுத்த முடியும்“ என்று வினவுகிறார்.

அன்று கடலுக்குச் சென்ற மற்றொரு மீனவர் தாக்கப்பட்ட படகிலிருந்து தம்மைக் காப்பாற்றும்படி தமக்கு வாக்கி-டாக்கி செய்தியொன்று வந்தது என்றும், தாங்கள் அங்கு சென்ற போது இலங்கைக் கடற்படை தங்களை அச்சுறுத்தி விரட்டியடித்தனர் என்கிறார்.

மூழ்கடிக்கப்பட்ட படகிலிருந்தோரைத் தேடி ராமேஸ்வரத்திலிருந்து 12 மீனவர்கள் நான்கு படகுகளில் விரைந்துள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக காவல்துறை மற்றும் மீன்வளத்துறை ஆகியோரிடம் இலங்கைக் கடற்படை நடத்திய தாக்குதல் குறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments