கடந்த பத்து வருடங்களில் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய பெரும்பாலான உயிரினங்கள் இலங்கையில் அழிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய அழிவடைந்த சுமார் 35 உயிரினங்களில் இலங்கைக்கே உரித்தான 21 உயிரினங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த வியாழக்கிழமை இறுதியில் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள், சூழலியல் அறிஞர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஊடகவிலாளர்களுடன் அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துரையாடியுள்ளார்.
ரெட் டேட்டா புத்தகத்தில் உள்ள தகவல்களை மேற்கோள் காட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் துஅமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இந்த சுட்டிக்காட்டியுள்ளனர். விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நாட்டில் சில தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்து சரியான கவனம் செலுத்தாததால் அழிந்து போகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
”பண்டு கரந்த” இன தாவரம் உள்ளிட்ட மேலும் 10 தாவர இனங்கள் அழிவடைந்துள்ளதாகவும், அதேபோல் அழிவினை எதிர்நோக்கியுள்ள உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீர் நிலைகளில் வளரும் தாவரங்களை அழிப்பதால் அதில் தங்கி வாழும் உயிரினங்கள் அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தாவரங்கள் மற்றும் ஆபத்தான விலங்கினங்களை பாதுகாக்க காடழிப்பு அல்லது உயிரினங்களை அழிப்பதை தடைசெய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு இதன்போது அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த தகவல்களை தனக்கு வழங்குமாறு சுற்றுச்சூழல் அமைப்புகளை அமைச்சர் கேட்டுக்கொண்டதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
பட்டியலைப் பெற்ற பின்னர், வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கும், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.