சுகாதார அமைச்சரின் தடுப்பூசி கதையால் அரசாங்கத்திற்கு சிக்கல்

0
Ivory Agency Sri Lanka

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்று தயாரிக்கப்படுவதாகவும், அதனை வழங்குவதற்கு தயாராகுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தை கேட்டுள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருக்க வேண்டுமென சுகாதார அமைச்சர் அறிவித்த விடயம், தற்போது அரசாங்கத்திற்கு சிக்கலை தோற்றுவித்துள்ளது.

இது குறித்து தமக்கு அறியத்தரப்படவில்லை இலங்கை தொற்றுநோயியல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆய்வக சோதனை மட்டத்தில் உள்ள தடுப்பூசிகளை பரிசோதிக்க இலங்கையைப் பயன்படுத்துவதற்கான திட்டமாக இது இருக்கக்கூடும் என சுகாதாரத் துறையில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

“இந்த நோயைத் தடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. எனவே அதனை பயன்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்” என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கடந்த 24ஆம் திகதி இரத்தினபுரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

நாடு முழுவதும் தடுப்பூசியை வழங்குவதற்கு தயாராகி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது குறித்த சமூக விவாதத்தில் ஈடுபட்டுள்ள விடயத்தைக் கருத்திற் கொண்டு, இது தொடர்பாக, உண்மையான நிலைமையை அறிவியல் ரீதியாக விளக்க கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக, அதே தினத்தில் உலக சுகாதார அமைப்பின் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்திருந்தது.

உலகளவில் 200 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதிக்கப்படுவதாக, இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி வைத்தியர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வைத்திய பரிசோதனைகளின் நான்கு நிலைகளை கடந்து செல்ல வேண்டும், அவற்றில் குறைந்தது எட்டு இப்போது வைத்திய பரிசோதனைகளின் இறுதி கட்டத்தில் உள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார்.

“இதன் பொருள் 2020ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், இந்த வைத்திய பரிசோதனைகளின் முடிவுகள், அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயற்றிறன் ஆகியவற்றை நாங்கள் அறிந்து கொள்ள முடியும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றுநோயிலிருந்து விடுபடுவதற்கான தடுப்பூசியின் யதார்த்த நிலைமை இவ்வாறு இருந்தபோதிலும் சுகாதார அமைச்சரின் குறித்த அறிவிப்பு சுகாதாரத் துறையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

‘வைத்திய சோதனை’ ஆபத்தானது

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரியா, “சுகாதார அமைச்சர் தெரிவித்தது மாத்திரமே எங்களுக்குத் தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய ரீதியாக பொருத்தமான எந்தவொரு தடுப்பூசியையும் இதுவரை அங்கீகரிக்கவில்லை. அங்கீகரிக்கப்படாத ஒன்றை இலங்கைக்கு அனுப்ப வழி இல்லை. அப்படியானால், அதை ஒரு ‘வைத்திய சோதனைக்கு’ அனுப்புகிறார்கள் என்றே அர்த்தம். அப்படி ஒரு விடயத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவை மக்களுக்கு ஆபத்தானவை. ”

எனவே ‘இது என்ன ஊசி? இலங்கை எதற்காக தெரிவு செய்யப்படுகிறது? வைத்திய பரிசோதனைக்காகவா இங்கு அனுப்புகிறார்கள்? என்பது தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டறிவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் தற்போது தடுப்பூசி பரிசோதனை விடயத்தில், சுகாதார அமைச்சின் கூற்றுத் தொடர்பில் ஆராய்கையில் இரண்டு பக்கங்கள் காணப்படுவதாக அரச வைத்திய ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

“ஒன்று இது அரசியல் ரீதியாக நினைத்துக் கூறப்பட்டக் கதை, அல்லது இலங்கை வைத்திய பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படலாம்” என அவர் கூறியுள்ளார்.

“உலக சுகாதார அமைப்பு இதுபோன்ற நேரத்தில் இலங்கையிடம் இதுபோன்ற வேண்டுகோளை விடுத்தால், அவ்வாறு செய்ய விரும்புவோருக்கு அவ்வாறு செய்ய உரிமை உண்டு. ஏனெனில் இந்த ஆராய்ச்சிக்கு உதவுவது மனிதகுலத்திற்கு ஒரு சேவை என்று யாராவது நினைத்தால், அதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது. நானும் முன் இதற்கு முன்வர விரும்புகிறேன். இந்த நாட்டு மக்களுக்காக அல்ல. மனித இனத்தை காப்பாற்றுவதற்காகவே. ஆனால் நீங்கள் அதை அறிந்திருக்க வேண்டும். முன்பு போன்ற ஏழை நாடுகளில் உள்ளவர்களை ஏமாற்றும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாது. எனது கருத்துப்படி, உலக சுகாதார ஸ்தாபனம் அதைச் செய்யும் ஒரு அமைப்பு அல்ல. ”

நூறு ஊசிகள்

தடுப்பூசிக்கு முழு நாடும் தயாராகி வருவதாக அமைச்சர் வெளியிட்ட கருத்துத் தொடர்பாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவிடம் கேட்டபோது, கேள்விக்கு பதிலளித்த கொரோனா பிரிவின் அதிகாரி ஒருவர், சுகாதார அமைச்சு இதுவரை இது எவ்வித அறிவித்தலையும் விடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், தற்போது கொரோனா வைரஸிற்கான 200ற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை உருவாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய தடுப்பூசி செய்திகளுக்கு அமைய இவற்றில் சில மனித பரிசோதனை நிலையை எட்டியுள்ளன.

தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டமைப்பு (GAVI) மற்றும் யுனிசெப் ஆகியவற்றுடன் இணைந்து, கொரோனா வைரஸ் தடுப்பூசி தேவைப்படும் அனைத்து நாடுகளுக்கும் அவற்றை பாதுகாப்பாக வழங்க உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் காணப்படுவதை உறுதி செய்ய உலக சுகாதார அமைப்பு செயற்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments