பண்டாரவளை காவல்நிலைய பொறுப்பதிகாரி பதவிக்கு நண்பனை நியமிக்க கோரிக்கை

0
Ivory Agency Sri Lanka

பண்டாரவளை பிரதேச சபையின் தவிசாளர் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவரை பிரதேசத்தின் காவல்துறை பொறுப்பதிகாரியாக நியமிக்க நிதி அமைச்சரின் உதவியை நாடியுள்ளார்.

“பண்டாரவளை காவல் நிலையத்தில் வெற்றிடமாக உள்ள காவல்துறை தலைமையக பரிசோதகர் பதவிக்கு நியமனம் கோரல்” என்ற தலைப்பில் பண்டாரவளை பிரதேச சபையின் தலைவர் கரகஹவெல நந்தவிமல தேரர், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

குறித்த பதவிக்கு ஹப்புத்தளை காவல்நிலைய பொறுப்பதிகாரியாக ஏற்கனவே கடமையாற்றும் சாகர ரொஹான் தயாரத்னவை நியமிப்பது பொருத்தமானது என தலைவர் நிதி அமைச்சரிடம் யோசனை தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரி தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த அதிகாரி எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த மிகவும் திறமையான, அனுபவம் வாய்ந்த மற்றும் நேர்மையான அதிகாரி என்பதை நான் மேலும் கூற விரும்புகிறேன்.”

கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் அடிப்படையில் பண்டாரவளை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் அந்த பதவி வெற்றிடமாக உள்ளது.

”பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவில் துரித நகரமயமாதலால் நாளுக்கு நாள் சமூகப் பேரழிவுகள் அதிகரித்து வரும் இவ்வேளையில், அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் அந்த முரண்பாடுகளைத் தணித்து, மக்களுக்கு அமைதியான, சுதந்திரமான சூழலை மரபுரிமையை பெற்றுத் தருவதே ஒரே நோக்கமாகும்.” என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பண்டாரவளை தொகுதியின் அமைப்பாளரான கரகஹவெல நந்தவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரியின் நியமனம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பண்டாரவளை பிரதேச சபையின் தலைவர் கரகஹவெல நந்தவிமல தேரர் மேலும் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கும், உரிய அதிகாரியின் நியமனம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எனது கோரிக்கை தொடர்பில் உங்கள் கவனத்தைச் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”

Facebook Comments