முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான் கானிடம் கோரிக்கை

0
Ivory Agency Sri Lanka

இலங்கையில் முன்னெடுக்கப்படும் கட்டாய தகன விடயத்தில் தலையீடு செய்யவும், ஜெனீவாவில் அரசாங்கத்தை ஆதரித்து, தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட வேண்டாம் எனவும் இலங்கை முஸ்லிம் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் பாகிஸ்தான் பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பிரதமர் இம்ரான் கானின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, முஸ்லிம்களுக்கு அடக்கம் செய்வதற்கான உரிமைகளை வழங்குவதில் பாகிஸ்தான் பிரதமர் தலையீடு செய்ய வேண்டுமமென, முஸ்லிம் இடதுசாரி முன்னணி, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்ததில் இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகம் குறிப்பாக மகிழ்ச்சியடைவதாகவும், கொரோனாவால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க, இலங்கை அரசாங்கத்துடன் உயர் மட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என தாம் நம்புவதாகவும் அந்த கோரிக்கை மகஜரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நாட்டின் தலைவராக, தகனம் செய்வதற்கு பதிலாக அடக்கம் செய்வதன் கலாச்சார முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் செயலாளர் எம்.ஆர்.எம் பைசல் தாம் கையளித்த மகஜரில் குறிப்பிட்டுள்ளதாக, புதன்கிழமை (24) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவது “இலங்கை நண்பரின் வேலை அல்ல” என பாகிஸ்தான் பிரதமருக்கு ஒப்படைக்கப்பட்ட மகஜரில் சுட்டிக்காாட்டப்பட்டுள்ளதோடு, அவ்வாறு செயற்படுவது, தமிழ் சமூகத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற நியாயமான சட்ட ரீதியான போராட்டத்திற்கு சேதம் விளைவிப்பதாக அமையும் எனவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“முஸ்லிம்களும் தமிழர்களும் அடுத்தடுத்த அரசாங்கங்களின் கீழ் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களையும், உண்மை மற்றும் நீதியைக் கோரி நிற்கும் கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்களையும் குறிப்பாக குறிப்பிட வேண்டும். முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ளூரில் நீதி கிடைக்காததால், இலங்கையில் நல்லிணக்கம் தடுக்கப்பட்டுள்ளது. நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான நாட்டை நோக்கிய எங்கள் பயனம் நிறுத்தப்பட்டுள்ளது.”

பாகிஸ்தான் பிரதமர் தனது பயணத்தை நிறைவு செய்து புதன்கிழமை பிற்பகல் நாடு திரும்பினார், கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக, இரு நாடுகளும் இதுவரை அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை.

பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு முன்னர், பிரதமர் இம்ரான் கான் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை ஊடகங்களுக்கும் வெளியிடப்படவில்லை.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் மகஜரை கையளித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் செயலாளர் எம்.ஆர்.எம் பைசால், முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ முடியாது எனக் குறிப்பிட்டார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்த அரசாங்கம் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை வழங்க மறுத்து வருவதாக அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் ஒரு தலைவர் என்ற வகையில், இலங்கை முஸ்லிம்களுக்கு நீதியை வழங்குமாறு ஜனாதிபதியையும் பிரதமரையும் அறிவுறுத்துமாறு, பாகிஸ்தான் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாக இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் உள்ள சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை வேறு எந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கத்தைப் போல ஏமாற்றவில்லை எனவும் தொழிற்சங்கத் தலைவர் குற்றம் சாட்டினார்.

அரசாங்கத்தை ஆதரித்த பௌத்த தேரர்கள், ஒரு மரத்தை காப்பாற்றுவதற்காக வீதிகளில் இறங்கி தமது, ஆடைகளை போர்த்த வேண்டிய நிலைக்கு நாடு இன்று தள்ளப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments