நான்கு மாதங்களில் பொலிஸுக்குள் எட்டு மரணங்கள்

0
Ivory Agency Sri Lanka

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைதிகள் கொலை செய்யப்படுவது தொடர்பிலான குற்றச்சாட்டுகள், அதிகரித்துள்ளதாக நாட்டின் முன்னணி கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு ஒன்று அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருடம் ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் பொலிஸ் காவலில் இருந்த எட்டு கைதிகள் உயிரிழந்துள்ளமைத் தொடர்பிலான தகவல்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 20ஆம் திகதி தடுப்புக் காவலில் இருந்தபோது கொல்லப்பட்ட மாகந்துரே மதுஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்சிதவின் மரணமும் இதில் அடங்கும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமை அல்லது அதற்கு இணையான மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அல்லது வேறு உத்தரவிற்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரின் நலன்கள் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென, பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி விக்ரமரத்னவிற்கு, ஆணைக்குழுவின் ஆணையாளர் ரமணி முத்தெட்டுவகம அனுப்பிவைத்தள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிராபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு முற்கூட்டியே தெரிவித்த போதிலும், மதுஷின் உயிரிழப்பு குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

”இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி, கொழும்பு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்ட மாகந்துரே மதுஷின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக, , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கினங்க, மதுஷின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு, தொலைநகல் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியபோதிலும் மாகந்துரே மதுஷ் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது”

மனித உரிமைகள் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடந்த ஒக்டோபர் மாதம் அனுப்பிவைத்த கடிதத்தில், பொலிஸ் காவலில் இருந்தவர்கள் உயிரிழந்தமைக் குறித்து ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் வரவில்லை

கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பொறுப்பதிகாரி ஆகியோரை, ஒக்டோபர் 21ஆம் திகதி காலை 11.30 மணிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோதிலும், அவர்கள் எந்த காரணமும் தெரிவிக்காமல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டப் பிரிவு 21இன் கீழான ஒரு விடயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணையாளர், குறித்த அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு கடுமையான சிக்கலை உருவாக்கும் என, மனித உரிமைகள் ஆணைக்குழு நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தப்பிக்க முயற்சிக்கும்போது மரணங்கள்

போகம்பரை பழைய சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 5 சிறைக் கைதிகள் அன்றைய தினம் அதிகாலையில் சிறைச்சாலைகளில் மதில் மீது ஏறி தப்பி செல்ல முயறசி செய்த போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, நவம்பர் மாதம் 18ஆம் திகதி புதன்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதன்போது உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேந்த 30 வயதுடைய நபர் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவிவரும் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைகளில் கைதிகள், கொள்ளப்பட்டு வருவதாக சிறைக் கைதுகளின் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளதுடன், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளின் கைகளிலேயே அந்த கைதிகள் உயிரிழப்பது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

யு.ஜி.உபுல் நிலந்த எனப்படும் சந்தேகநபரினால் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மொனராகலை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மற்றுமொரு அதிகாரியுடன் சேர்ந்து குறித்த சிறைக்கைதியை தாக்கியதால் நவம்பர் 3ஆம் திகதி அம்பாறை நவகம்புற கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் மரணித்தமை குறித்து சிறைக் கைதிகளின் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும், சட்டத்தரணியுமான சேனக பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்றைய தினமே சிறைக்கைதிகள் மரணங்கள் குறித்து விஷேட விசாரணையொன்றை முன்னெடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனி தெரிவித்திருந்தார்.

தொற்றுக்கள் பரவிவரும் இக்கால கட்டத்தில் நாட்டின் சில சிறைச்சாலைகளில் இவ்வாறான மரணங்கள் நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தாம் ஞாபகப்படுத்திக்க கொள்வதாக மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி சுட்டிக்காட்டிய அதேவேளை, குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து இது வரையிலும் சிறைச்சாலை சட்டங்களுக்கு அமைய தண்டனைகள் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் குறித்த அதிகாரிகள் இவ்வாறான குற்றங்களை புரிவதற்கான தூண்டுதலையும், தைரியத்தையும் ஏற்றப்படுத்துவதாகவும் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் குற்றம் செய்தவர்கள் என்ற எண்ணத்தை ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் சமூகமயப்படுத்தியுள்ள நிலையில், கைதிகளை அதிகாரிகள் பாரிய சித்திரவதைக்கு உட்படுத்துவதாக சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பு சங்கம் எடுத்துக்காட்டுகிறது .

மஹர மற்றும் அனுராதபுரம்

சிறையில் இருந்து தப்பிக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்ததாக குறிப்பிடப்படும் ஒரு கைதி, அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கடந்த மே மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மே 3ஆம் திகதி மஹர சிறையில் இருந்தபோது உயிரிழந்த காவிந்த இசுறுவின் தந்தை சுமனதாச திசேரா இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.

தனது புதல்வரின் மரணம் ஒரு தாக்குதலால் நிகழ்ந்ததாகவும், அவரது கால்கள் மற்றும் கைகள் உடைக்கப்பட்டிருந்ததாகவும் அவரது தாய் ஆர்.எம்.கருணாவதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில், அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய போராட்டத்தின் மீது சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதில், கைதி ஒருவர் உயிரிழந்தமைத் தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

தனது கணவனைக் கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆராச்சிலாகே சமன் குமாரவின் மனைவி, ஓகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனுராதபுரம் சிறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments