கவிஞர் அஹ்னாஃப் ஜசீம் தடுத்து வைக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து சட்டத்தரணிகள சந்திக்கும் வாய்ப்பு

0
Ivory Agency Sri Lanka

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜசீமை சந்திக்க அவரது சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மன்னார் தமிழ் வாசகர்களால் நன்கு அறியப்பட்ட இளம் கவிஞர் அஹ்னாப் ஜசீம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான “நவரசம்” எனும் நூல் ஊடாக மாணவர்களை ‘தீவிரவாத சித்தாந்தங்களை’ பின்பற்றுபவர்களாக மாற்றும் முயற்சியில் “தீவிரவாத” விடயங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டார்.

கடந்த வருடம் மே மாதம் 16ஆம் திகதி கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல், பொலிஸில் தடுத்து வைத்திருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி அஹ்னாப் ஜசீம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, கடந்த 4ஆம் திகதி, நீதிபதிகளான முர்து பெர்னாண்டோ, யசந்த கோடேகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அஹ்னாஃப் ஜசீம் கவிஞர் சார்பில் அவரது சட்டத்தரணி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் தொடர்பில் ஆலோசனை பெற தனது வாடிக்கையாளரை சந்திக்க சென்ற போதிலும், அது வெற்றியளிக்கவில்லை என, ஜனாதிபதி சட்டத்தரணி கே.எஸ் கனகஈஸ்வரன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளதாகவும், தடுப்புக்காவல் உத்தரவு நிறைவடைந்த பின்னர், நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாகவும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிகசொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் ஜசிமின் அடிப்படை உரிமை மனு தொடர்பில் சட்டமா அதிபர் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதிகள் குழாம், அஹ்னாஃப் ஜசீமை சந்திக்க அனுமதிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, செப்டெம்பர் 8ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Facebook Comments