தொழிற்சாலை உரிமையாளர்களால் வர்த்தக வலையங்களில் கொரோனா ஆபத்து

0
Ivory Agency Sri Lanka

கொடிய கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொண்டு உற்பத்தி நிறுவனங்களை நடத்த சுகாதார அதிகாரிகள் பதிதாக வழிகாட்டல்களை வழங்கத் தவறிய காரணத்தினால் தொழிலாளர்கள் வைரஸின் புதிய திரிபுகளுக்கு இரையாகி வருவதாக தனியார் துறையின் முன்னணி தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு, சுதந்திர தொழிற்சாலைகளிலும், வர்த்தக வலையத்திற்கு வெளியேயும் அதிகளவில் தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதத்தில், சுதந்திர வர்த்தக வலையம் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் ஆகியன தெரிவித்துள்ளன.

பல தொழிற்சாலைகளில் தாமதமாகியேனும் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இரண்டு டோஸ்களும் ஒரு சிறிய தொகையினருக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும், சுதந்திர வர்த்தக வலையம் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் அன்டன் மார்கஸ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தடுப்பூசி போடப்பட்டதால் பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பிசிஆர் அல்லது துரித அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்.

“ஏப்ரல் 2021 இல் வெளியிடப்பட்ட உங்கள் சுகாதார வழிகாட்டுதல்களில் நூற்றிற்கு ஒரு சதவிகிதம் மாத்திரமே சோதிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாக பல நிர்வாகங்கள் கூறியுள்ளன. எனினும் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு நாடு முழுவதும் தொற்றுநோயை அதிகரிக்கச் செய்வதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஆலோசனையே இது. ஆகவே அது இனியும் பொருத்தமற்றது என்பதே எமது நிலைப்பாடு.”

காற்றுச் சீரமைப்பிற்காகவும், காற்றோட்டத்திற்காகவும் நிறுவனங்களில் யன்னல்களை திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், எனினும் பல நிறுவனங்கள் அவ்வாறு செயற்படுவதில்லை எனவும் தொழிற்சங்கத் தலைவர் அன்டன் மார்கஸ், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

“தொழிற்சாலைகளில் துணியின் தரத்தை பராமரிக்க குளிரூட்டி பயன்படுத்தப்படுகிறது. அந்த கட்டிடங்களில் உள்ள யன்னல்கள் வெளிச்சத்திற்கு மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன”

இந்த விடயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர் சுகாதார அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து தொழிற்சாலைகளும் தற்போது அனைத்து ஊழியர்களையும் தங்கள் அதிகபட்ச உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாளாந்தம் பணிக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக, அன்டன் மார்கஸ் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பெரும்பாலான நிறுவனங்கள் கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இரண்டு மீற்றர் இடைவெளியை பேண வேண்டுமெனவும், ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு மீற்றர் அல்லது இடைவெளியை பேணுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் யாரும் தனிமைப்படுத்த மாட்டார்கள் எனவும், வழமைப் போல், அவர்கள் அதே பணியிடத்தில் வேலைக்கு அமர்த்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பாதிக்கப்பட்ட நபர்கள் மாத்திரமே அகற்றப்படுவார்கள். ஆடை நிறுவனம் ஒன்றில் எமது தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதுத் தொடர்பில் விசாரித்தபோது, அவசர முன்பதிவுகள் இருந்ததால் எங்களால் அதனை செய்ய முடியவில்லை என நிர்வாகம் கூறியது. தற்போது, நிறுவனத்தின் நாற்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உற்பத்தி பணிகளையும் மீதமுள்ள ஊழியர்களே மேற்கொள்ள வேண்டுமென நிர்வாகம் தெரிவித்துள்ளது.”

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சுமார் 40,000 ஊழியர்கள் காணப்படுவதோடு, அவர்களுக்கு தொற்று ஏற்பட்டவுடன் அருகிலுள்ள நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற வேண்டும்.

அரச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுநோய் வார்டுகளில் அதிக நோயாளர்கள் காரணமாக வர்த்தக வலைய தொழிலாளர்களுக்கு சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர வர்த்தக வலையம் மற்றும் அருகிலுள்ள பிற தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், பிசிஆர் பரிசோதனைகளை நடத்தும் பொறுப்பு அப்பகுதிக்கு பொறுப்பான வைத்திய அதிகாரிகள் ஊடாக இடம்பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் டெல்டா திரிபு இப்போது நாடு முழுவதும் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆபத்தை கருத்தில் கொண்டு உற்பத்தித் தொழிலுக்கு குறிப்பிட்ட வைத்திய வழிகாட்டுதல்களை அவசரமாக வெளியிட வேண்டுமென சுதந்திர வர்த்தக வலையம் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பாக பின்வரும் ஏழு திட்டங்களைச் இணைக்குமாறு சுதந்திர வர்த்தக வலையம் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

01. சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் ஆடை தொழிற்சாலைகளில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சிகிச்சையளிக்க சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் ஆடை தொழிற்சாலைகளுக்கு அருகில் வைத்திய நிலையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களை நிறுவுதல்.

02. தனிமைப்படுத்தலுக்காக நிறுவனங்களால் நடத்தப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவுதல்;

03. தொழிற்சாலைகளில் குறைந்தபட்சம் 40% ஊழியர்கள் வழமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

04. தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் இரண்டு மீற்றர் இடைவெளியை பேணும் வகையில் சேவைக்கு அழைக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும், அந்த காலப்பகுதியில் பணிப்பு அழைக்கப்படாத ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குதல்

05. தொழிற்சாலைகளின் தினசரி கிருமி நீக்கத்தை கட்டாயமாக்குதல்;

06. தொழில் அமைச்சர் தலைமையிலான முத்தரப்பு பணிக்குழு பரிந்துரைத்தமைக்கு அமைய பணியாளர்கள் இருவரையும் உள்ளடக்கிய சுகாதாரக் குழுக்களை நிறுவுதல்;
தொழிற்சங்கங்கள் அமைந்துள்ள பணியிடங்களில் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை அந்த குழுவிற்கு நியமித்தல் மற்றும் அப்பகுதியில் உள்ள சுகாதார தலைமை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு, நியமிக்கப்பட்ட சுகாதார குழுக்களின் பிரதிநிதிகளின் பெயர்கள் மற்றும் பெயர்கள் அடங்கிய அறிக்கையை வழங்குதல்.

07. தொற்றுக்குள்ளான ஊழியர்கள், அவர்கள் சிகிச்சை பெறும் இடங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் குறித்த விபரங்கள், அவர்களின் பெயர், முகவரி, அவர்கள் பணியாற்றும் இடம் குறித்த தகவல்கள் அடங்கிய ஒரு தரவுத்தளத்தை, சுதந்திர வர்த்தக வலைய அலுவலகங்களின் பராமரித்தல்.

Facebook Comments