கொடிய தொற்றுநோயிலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக தடுப்பூசிகளை உழைக்கும் மக்கள் கோருகையில், அடக்குமுறை நடவடிக்கையாக ஜனாதிபதி அத்தியாவசிய சேவை அறிவித்தலை திணித்து, அடக்குமுறையை கையாள்வதாக குறிப்பிட்டுள்ள தொழிற்சங்கங்கள் இதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.
கொரோனா தொற்றுநோய் பரவலின்போது, பல்வேறு துறைகளில் உழைக்கும் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் பல்வேறு அரசியல் தொடர்புகளுக்கு அமைய
முறைசாரா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், பல துறைகளில் உழைக்கும் மக்கள் தடுப்பூசியை கோரி பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தடுப்பூசி வழங்குமாறு கோரி, கிராம சேவகர்கள் கடமையில் இருந்து விலகியிருந்ததாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் கடமைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள ஏராளமான வங்கி ஊழியர்கள், அரச ஊழியர்கள், சமுர்தி அதிகாரிகள், பேருந்து தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள், துறைமுக மற்றும் தபால் ஊழியர்கள் ஆகியோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், அவர்கள் தமக்கு தடுப்பூசி வழங்வேண்டுமென கோரி பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.
அவர்களின் மனிதாபிமான கோரிக்கைத் தொடர்பில் அவதானம் செலுத்தி, கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்துவதற்கு பதிலாக, மே 27 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஊடாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, துறைமுக அபிவிருத்தி அதிகார சபை பெற்றோலிய உற்பத்தி உள்ளிட்ட அனைத்து விதமான எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்ந்தளித்தல் துறைமுகங்கள் மற்றும் கடற்றொழில் சேவை
ரயில்வே இலங்கை போக்குவரத்து சபை, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர் சேவை உள்ளடங்கலாக பிரதேச மட்டத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச ஊழியர்களினது சேவைகள், இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகள், காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ சேவை ஆகியவற்றை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளதாக, உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு ஒரு அறிக்கையின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சேவைகளில் பணிபுரியும் நபர்கள்தான் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்புடன் நேரடியாக தொடர்புகொள்கிறார்கள், மேலும் அவர்கள் கெரோனா தொற்றின் நேரடி ஆபத்தில் உள்ளனர்.
இந்த சூழலில், இந்த சேவைகளை இந்த வழியில் அத்தியாவசிய சேவைகளாக மாற்றுவது தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்குவதற்கான அடக்குமுறை நடவடிக்கை என அறிவிப்பதாகவும், இந்த அடக்குமுறை சூழ்நிலையை கடுமையாக எதிர்ப்பதாகவும், உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
மே 28, வெள்ளிக்கிழமை உழைக்கும் மக்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1979 ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் விதிகளின் கீழ் மேற்கண்ட அடக்குமுறை வர்த்தமானி அறிவிப்பை வெளியிடப்பட்டதன் காரணமாக, கிராம சேவக அதிகாரிகள் தங்களது தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று பிற்பகல் இடைநிறுத்தியதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை தொழிற்சங்க நடவடிக்கையைத் தடுக்க அரசாங்கம் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம் இது என, இலங்கை ஐக்கிய கிராம சேவகர் அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஏ அதுல சீலமன் ஆராச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்குவதற்காக அரசாங்கம் இந்த அத்தியாவசிய சேவை உத்தரவுகளை பிறப்பித்துள்ளமை தெளிவாவதாக உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குறித்த சேவைகளில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்தவும், தொழில்முறை நடவடிக்கைகளை அடக்குவதற்கு பயன்படுத்தப்படும் மேற்கண்ட அத்தியாவசிய சேவை உத்தரவுகளை உடனடியாக அகற்றுவதற்கும், கொரோனா தடுப்பூசி திட்டத்தை அரசியல் தலையீட்டுடன் அல்லது குடும்ப உறவினர்களை மையப்படுத்தி மேற்கொள்வதை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு, ஜோசப் ஸ்டார்லின், ரவி குமுதேஷ், ஜகத் குருசிங்க மற்றும் சிந்தக பண்டார உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.