இலங்கையில் அரச நிறுவனங்களுக்கு சொந்தமாக 82,000ற்கும் மேற்பட்ட வாகனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
பொருளாதார கொள்கை மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக, பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அரச வணிக நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் 82,194 வாகனங்கள் இருப்பதாக அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
அவற்றில், 76,661 வாகனங்கள் நடப்பில் இயங்குவதுடன், 5,533 வாகனங்கள் இயங்கு நிலையற்றதாகக் காணப்படுகின்றது.
இயங்கு நிலையிலுள்ள வாகனங்களில் 33,931 வாகனங்கள் அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களிடமும், அரச வணிக நிறுவனங்களிடம் 26,395 வாகனங்களும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் 16,335 வாகனங்களும் காணப்படுகின்றன.
அரச நிறுவனங்களிலுள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் 8,500 பேருக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டு அவர்களின் பிரத்தியேக மோட்டார் வாகனங்களுக்கு உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொள்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால், சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களைக் கருத்தில் கொண்டு தற்போது இயங்கு நிலையில் அல்லாத வாகனங்களில் திருத்தம் செய்யக்கூடிய வாகனங்களைத் துரிதமாக திருத்தம் செய்து பாவனைக்குட்படுத்தவும், திருத்தம் செய்ய முடியாத வாகனங்களை முறையான பெறுகைக் கோரலை பின்பற்றி தாமதிக்காமல் அகற்றுவதற்கும் இலங்கை அமைச்சரவை நேற்று (23) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.