காவல்துறை அடக்குமுறையை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

0
Ivory Agency Sri Lanka

கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக போராடும் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் காவல்துறை அடக்குமுறையை நிறுத்த தலையிடுமாறு, தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைமை ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்ட ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியே, தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக தொழிற்சங்கத் தலைவர்கள் கடந்த வார இறுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஓகஸ்ட் 3ஆம் திகதி, மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில், கொத்தலாவல பல்கலைக்கழக திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது அரச சொத்துக்களை சேதப்படுத்தியதாகக் கூறி மாணவர் மற்றும் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

“மேலும், 13 மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், அவர்களில் சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு பிணையில் விடுதலை செய்வதற்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.”

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவரும் பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் தலைவரும் இணை ஏற்பாட்டாளருமான சத்துர சமரசிங்கவைத் தேடி அவரது வீட்டுக்கு வருகைத்தந்து வீட்டில் இருப்பவர்களை அச்சுறுத்துவதோடு, பணியபாற்றும் இடங்களைக் கண்டறிய பொலிஸ் உளவாளிகள் அனுப்பப்பட்டுள்ளனர்” என சுதந்திர வர்த்தக வலையம் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கத்தின் இணை செயலாளரும், தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் பிரதிநிதியுமான அன்டன் மார்கஸ், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என எச்சரித்த தொழிற்சங்கத் தலைவரை கைது செய்த விடயமும் குறித்த கடித்தின் ஊடாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கனிய வளங்கள் முன்னணியின் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித ஊடகங்களுக்கு தவறான தகவல்களை வெளியிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஓகஸ்ட் 3ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாகவும், அரச சொத்துக்களுக்கு எவ்வித சேதமும் விளைவிக்கப்படவில்லை எனவும், சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரான அன்டன் மார்கஸ், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான நிகழ்வுகள் நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குமென தெரிவித்துள்ள தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்கள், காவல்துறை அடக்குமுறையை நிறுத்தவும், தமது கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு, இலங்கை வர்த்தகம் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் சங்கம், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் சம்மேளனம், கூட்டு தோட்டத் தொழிலாளர் சங்கம், உள்ளிட்ட தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் அங்கம் வகிக்கும் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை அனுப்பியுள்ளன.

Facebook Comments