வாழ்வாதாரத்திற்காக போராடும் பழங்குடியினருக்கு வனத்துறையினரால் துன்புறுத்தல்

0
Ivory Agency Sri Lanka

வனத்தை அழிக்கும் சட்ட விரோத செயல்களை கண்டு மௌனம் காக்கும் வனவிலங்கு அதிகாரிகள், அன்றாட வாழ்வாதாரத்திற்காக வனப்பகுதிக்குள் நுழையும் ஆதிவாசி மக்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“வேடுவ மக்களுக்கு காடும் வாழ்வும் மரத்தின் பட்டை போன்றது. எங்கள் முழு தலைமுறையினரும் காட்டில் வாழ்ந்தனர், எங்கள் வாழ்க்கை காட்டில் உள்ளது. சேனாநாயக்க சமுத்திரத்தால் காட்டில் இருந்து அகற்றப்பட்டதிலிருந்து, எங்கள் மக்கள் பெரிய நெருக்கடியில் உள்ளனர், ஆனால் இந்த நாட்டின் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் எங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றார்கள் இல்லை” என பிபில ரதுகல பழங்குடியின தலைவர் தானிகல மஹாபண்டியலாகே சுதாவன்னி குற்றம் சாட்டுகின்றனர்.

கல்ஓயா தேசிய பூங்காவில் உள்ள உல்ஹெல வயல்வெளியில் பாரியளவில் மாணிக்கக்கல் அகழ்வின் போதும் சட்டவிரோத மதுபானத் தயாரிப்பின்போதும் மௌனமாக இருக்கும் வனவிலங்கு அதிகாரிகள், நெல்லி உள்ளிட்ட பழங்கள் அல்லது பீடி இலைகளை தேடிச் சென்றாலோ அல்லது மீன் பிடிக்க சென்றாலோ தமது ஆதிவாசி சமூகத்தை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றில் நிறுத்துவதாக ஆதிவாசி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கல்லோயா பூங்காவிற்கு அருகில் உள்ள சேனாநாயக்க சமுத்திரத்தில் பிள்ளைகளின் பசியைப் போக்க ஓரிரு மீன் பிடிக்கச் சென்றிருந்தோம். ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகில் இருந்து சில வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் எங்களை சுற்றிவளைத்து ஓட வேண்டாம் என சொன்னார்கள், நாங்கள் ஓடுவதற்கு எந்த காரணமும் இல்லை, ஆனால் துப்பாக்கி ஏந்திய சில கசிப்பு காய்ச்சிபவர்களும் இன்னும் சிலரும் இருந்தனர். இன்னும் சிலர் வனஜீவராசிகள் அதிகாரிகளைக் கண்டதும் ஓடினார்கள். அவர்களைப் பிடிக்க முயலாமல், எங்களுடன் பிடித்த மீன்களையும் கைப்பற்றிய அதிகாரிகள் படகில் அம்பாறை வனவிலங்கு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.”

” வனப்பகுதிக்குள் செல்ல எனக்கு வனவிலங்கு அலுவலகமே அனுமதி வழங்கியபோதிருலும் வனவிலங்கு அதிகாரிகள் என்னை கைது செய்தனர்.”

ரதுகல ஆதிவாசித் தலைவர் சுதா வன்னியா மற்றும் அவரது சகாக்கள் 6 பேர் கடந்த 11ஆம் திகதி சேனாநாயக்க சமுத்திரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டு 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

“காடோ, கிராமடோ இன்றி ஆதரவற்ற நிலையில் இருக்கும் நம் மக்களைப் பற்றி வித்தியாசமாக சிந்திக்கும் மூளை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும்.” என்கிறார் சுதா வன்னியா.

நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரதுகல கிராமத்தில் 260 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு வசிக்கும் பெரும்பான்மையான ஆதிவாசி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மற்றொரு பிரிவினர் நில்கலா மற்றும் கல்லோயா தேசிய பூங்காக்களில் இருந்து தான்றி, நெல்லி போன்றவற்றை சேகரித்து விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். ஏனையவர்கள் காட்டில் விளையும் பீடி இலைகள் அல்லது குடும்பேரியாவை (කුඩුම්බේරිය) சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர்.

சேனாநாயக்க கடலில் மீன்படித்த நிலையில் கைது செய்யப்பட்ட ரதுகல ஆதிவாசி தலைவர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி பிபில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊவா மாகாண உதவிப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

Facebook Comments