பைசர் தடுப்பூசி உத்தியோகபூர்வமாக இராணுவத்திடம் ஒப்படைக்கப்படவில்லை

0
Ivory Agency Sri Lanka

ஸ்ரீலஙகாவில் பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இராணுவத்திடம் ஒப்படைக்கும் செயற்பாட்டிற்கு முன்னணி வைத்திய தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள போதிலும், பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டம் உத்தியோகபூர்வமாக தம்மிடம் ஒப்படைக்கவில்லை என ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

பைசர் தடுப்பூசியை நிர்வகிக்கும் அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்த நிலையில், இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

சிலாபம் – கொக்காவில அரச பாடசாலையில் நிறுவப்பட்ட தடுப்பூசி மையத்தில் சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பைசர் தடுப்பூசி இனிமேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வழங்கப்படுமென, இராணுவத் தளபதி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பைசர் தடுப்பூசி வழங்கும் அதிகாரத்தை இராணுவத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவின் டி சொய்சா, “சிலாபத்தில் ஏதேனும் தவறு இடம்பெற்றிருந்தால் அது திருத்திக்கொள்ளப்பட வேண்டுமேத் தவிர, பைசர் தடுப்பூசி வழங்கும் அதிகாரத்தை இராணுவத்திற்கு வழங்குவது தவறு” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் அஸ்ட்ரா செனகா தடுப்பூசியை வழங்களின்போது சிலாபத்தைப் போன்று பிரச்சினை ஏற்பட்டதாகவும், எனினும் அந்த சந்தர்ப்பத்தில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை வழங்கும் அதிகாரத்தை ஏன் இராணுவத்திற்கு வழங்கவில்லை எனவும் வைத்தியர் நவின் டி சொய்சா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பைசர் தடுப்பூசியை இராணுவத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தடுப்பூசிகளுக்கு சுகாதார அமைச்சே பொறுப்பு வகிக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டி, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது.

இராணுவத்திற்கு தடுப்பூசியை வழங்குவதானால், போரின் போது சுகாதாரத் துறைக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்திருந்த, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்திய நிபுணர் நவீன் டி சொய்சா, யுத்தத்தின் போது இராணுவ அதிகாரிகளைப் போல, தவறிழைத்த சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது, முழு தொழில்நுட்ப செயல்முறையையும் நிறுத்துவது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்ட இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, “பைசர் தடுப்பூசியை இராணுவத்தினரால் வழங்கப்படுது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்புடன் இணைந்து குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்கும் கோவெக்ஸ் திட்டத்தின் ஊடாக 100,000 டோஸ் அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசியை ஸ்ரீலங்கா பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments