அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளுக்கு எதிரான ஏற்பாடுகளைக் கொண்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென முன்னணி கைதிகளின் உரிமைக்கான குழு கோரியுள்ளது.
செப்டம்பர் 13ஆம் திகதி ஆரம்பமாகும் பேரவையின் 48ஆவது அமர்வில் இலங்கை குறித்த அறிக்கையில், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகள் குறித்து குறிப்பிட வேண்டுமென, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிசெல் பெச்லெட்டுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், கைதிகள் உரிமைகளை பாதுகாக்கும் குழு கோரியுள்ளது.
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனகா பெரேரா கையெழுத்திட்டு, செப்டெம்பர் 4 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதம், சட்டவிரோதமாக தடுத்து வைத்தல் குறித்த ஐ.நா.வின் விசேட தூதுவர் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை குறித்து மீளாய்வு செய்கையில், நீண்டகாலமாக தடுத்து வைத்திருப்பவர்கள் குறித்து கரிசனை செலுத்துமாறு, ஐரோப்பிய நாடாளுமன்றத்திடம் அந்த கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
”இலங்கையில் தனிமனித சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு தீங்கு விளைவிக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் துன்புறுத்தல்களுக்கு தீர்வு காணுதல்” என்ற தலைப்பில் சட்டத்தரணி சேனக பெரேரா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்டதாகவும், எனினும் இது தற்போது இலங்கை சட்ட அமைப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“இருப்பினும், நாட்டில் எந்த கிளர்ச்சியும் வன்முறையும் இல்லாத போதிலும், இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு வேறு நோக்கம் உள்ளது என்பது தெளிவாகிறது.”
பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்கப்பட்ட பரந்த அதிகாரங்கள் ஊடாக, நீதிமன்றத்திற்கு அறிவிக்காத சட்டவிரோத கைதுகள்,
தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்துதல் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி பல்வேறு இடங்களில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டல் ஆகியவற்றுக்கு வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு நிவாரணம் வழங்க மூன்று பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளுக்கு முரணான விதிமுறைகளைக் இந்த சட்டம் கொண்டிருப்பதால், பல சமயங்களில் இந்தச் சட்டத்தைத் மீளமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது.”
இதற்கமைய 21.01.2021 மற்றும் 12.02.2021 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மூலம் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்டி நவாஸ் தலைமையில் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவை இலங்கை அரசு நியமித்துள்ளதோடு, அதன் இடைக்கால அறிக்கை 20.07.2021 அன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக சட்டத்தரணி சேனக பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இடைக்கால அறிக்கை அல்லது அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை செயற்படுத்தத் தவறியுள்ளதாக சட்டத்தரணி குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கம் ஒத்திவைத்தல் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால், கைதிகள் தமது வாழ்நாளை இழக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
12 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றம் சாட்டப்பட்ட 11 சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் பற்றிய விரிவான அறிக்கையையும் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு வெளியிட்டுள்ளது.
மன்னாரின் புகழ்பெற்ற கவிஞர் அஹ்னாப் ஜசீம், முக்கிய மனித உரிமை சட்டத்தரணி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க, கட்சித் தலைவர்கள் அசாத் சாலி மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இதற்கமைய, இந்த சட்டத்தின் சட்டவிரோதம் மற்றும் மனிதாபிமானமற்ற தன்மை காரணமாக ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட முடிந்தது.”
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக பல வருடங்களாக சட்டவிரோதமாக மக்களை தடுத்து வைத்து அவர்களின் உரிமைகளை நசுக்க முடிந்துள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி சேனக பெரேரா, தற்போது, ஜிஎஸ்பி சலுகையைப் பாதுகாப்பதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கான தனது ஆர்வத்தை சர்வதேச சமூகத்திறகு காட்டும் வகையில், அரசாங்கம் மோசடியான செயலில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணி சேனக பெரேரா தனது கடிதத்தில் இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடல்களில் இந்த விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ஜீஎஸ்பி பிளஸை இழக்கும் அபாயம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது உட்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், இலங்கை அதன் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளையும் பயங்கரவாத எதிர்ப்பு உதவிகளையும் இழக்க நேரிடும் என ஐரோப்பிய நாடாளுமன்றம் சமீபத்தில் எச்சரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடை சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.
ஊடக அடக்குமுறை, சட்டத்தின் ஆட்சி இல்லாமை, காணாமல் போதல்கள், கைதுகளின் போதான மரணங்கள், சிறுவர் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுதல், மற்றும் தொழிலாளர் உரிமைகள் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை பரவலாக விமர்சிக்கப்பட்டது.
இலங்கை தனது ஒப்புக்கொள்ளப்பட்ட மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றவில்லை என நிரூபிக்கப்பட்டால், அது தற்போதுள்ள ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நிவாரணம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்பி பிளஸ் சலுகை மீள்பரிசீலனை செய்யப்படும் இந்த வருடம் நவம்பரில் இலங்கையின் மனித உரிமைகள் பதிவை ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை செய்யும்.
மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஏற்பாடு மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தால் செயல்படுத்தப்படாததால், பெப்ரவரி 2010 இல் முன்னுரிமை வரி சலுகையான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டதோடு, நல்லாட்சி அரசாங்கம் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச உறுதிமொழிகளை அமுல்படுத்தும் என்ற நம்பிக்கையில் 2017 மே மாதம் மீண்டும் வழங்கப்பட்டது.