ஸ்ரீலங்காவில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வெளிநாட்டு சக்திகளை கடுமையாக நிராகரிக்கும் கொள்கையை பின்பற்றி ஆட்சிக்கு வந்த இரண்டாவது ராஜபக்ச அரசாங்கம், சர்வதேச சக்திகளுடன் மிகவும் நெகிழ்வாக செயற்பட முன்வந்துள்ளது.
அந்நிய செலாவணி நாட்டிற்குள் வருவது கடுமையாக தடுக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் கடினமான நிலையில் இருக்கும் நேரத்தில் அரசாங்கம் இந்த புதிய பாதையில் இறங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூன் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அறிவித்த நிலையில், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையை விசாரணை செய்ய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வருகையை வெளிவிவகார அமைச்சு வரவேற்ற நிலையில், இந்தக் கொள்கை மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.
ஸ்ரீலங்காவிற்கு மேலும் வரிச் சலுகைகளை நீட்டிப்பது பொருத்தமானதா என ஆராய ஐரோப்பிய ஒன்றியக் குழு இம்மாத இறுதியில் ஸ்ரீலங்காவிற்கு வருகைத்தரவுள்ளது.
இந்த குழு செப்டெம்பர் 27 நாட்டிற்கு வருகைத்தருவதோடு, ஒக்டோபர் 5 வரை தங்கியிருக்கும் என கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்களின் வருகை மிகவும் வரவேற்கத்தக்கது என ஸ்ரீலங்கா வெளிவிவகார செயலாளர் கூறியுள்ளார்.
“வந்து பாருங்கள்” என வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே, ஐரோப்பிய தூதரகத்தின் வருகை தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தெரிவித்திருந்தார்.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பரிசீலிக்கும் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதில் ஐரோப்பிய ஒன்றியம் அதிக அக்கறை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டத்தை இரத்து செய்யாவிட்டால், ஏற்றுமதி வரிச் சலுகையை மட்டுமல்லாமல் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றிய உதவியையும் ஸ்ரீலங்கா இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
“பயங்கரவாத எதிர்ப்பு சட்டமின்றி எந்த நாடும் இருக்க முடியாது. ஐரோப்பிய ஒன்றிய குழு வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் அச்சப்படவில்லை. எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஜெனீவா மாநாட்டில் ஸ்ரீலங்கா தொடர்பான வாய்மொழி அறிக்கையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பெச்லே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை துணைக்குழு நியமித்ததை அரசு உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தமது இடைக்கால அறிக்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒருபோதும் நீக்கக்கூடாது பரிந்துரைத்திருந்தது.
அறிக்கையை ஏற்றுக்கொண்ட நேரத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையுடன் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்காக பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த வருட பிற்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாக ஜெனீவா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.
ஜிஎஸ்பி பிளஸ் சலுகை மீள்பரிசீலனை செய்யப்படும் இந்த வருட நவம்பரில் ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் பதிவை ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்யும், மேலும் ஐரோப்பிய பிரதிநிதிகள் இந்த மாத இறுதியில் ஸ்ரீலங்காவிற்கு வந்து நிலைமையை கண்காணிக்க வேண்டும்.
அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் போது, ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிற அரச அதிகாரிகள் மற்றும் மேலும் பலரை சந்திக்கவுள்ளதாக அட்மிரல் ஜயநாத் கொலம்பகே கூறியுள்ளார்.
மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டின் மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தால் செயல்படுத்தப்படாததால் பெப்ரவரி 2010 இல் முன்னுரிமை வரி சலுகையான (ஜிஎஸ்பி பிளஸ்) இடைநிறுத்தப்பட்டது, நல்லாட்சி அரசாங்கம், மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளை செயற்படுத்துவது குறித்த உத்தரவாத்திற்கு அமைய, நம்பிக்கையின் அடிப்படையில், 2017 மே மாதம் ஜிஎஸ்பி பிளஸ் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது.
கடந்த ஆட்சியின் போது தொடர்ந்த மனித உரிமை மீறல்கள் தற்போதைய ஆட்சியில் அதிகரித்துள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அறிக்கைகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஸ்ரீலங்காவிற்கு கிடைத்த சலுகையை இழந்தால், ஆடைத் துறையில் மாத்திரம் 520 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்க நேரிடும் என நாட்டின் முன்னணி ஏற்றுமதியாளர்கள், எச்சரித்துள்ளனர்.