ஜிஎஸ்பி பிளஸ் கொடுக்கல் வாங்கல் தகவல்களைத் தேட ஐரோப்பாவிலிருந்து ஐந்து பேர் விஜயம்

0
Ivory Agency Sri Lanka

ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய நாடுகளுக்கான ஸ்ரீலங்காவின் ஏற்றுமதிக்கு மேலும் வரிச்சலுகைகளை வழங்க அனுமதிக்கும் மனித உரிமை பதிவுகளை ஸ்ரீலங்கா அரசு பின்பற்றுகிறதா என்பதை ஆராய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்த சிரேஷ்ட ஆலோசகர் நிகோலஸ் ஜைமிஸ், ஐரோப்பிய வெளிவிவகார சேவை தெற்காசிய பிரிவு தலைவர் இயோனிஸ் ஜியோகாரகீஸ் ஆர்கிரோபொலோஸ், ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி வர்த்தக விருப்பத்தெரிவுகள் ஒருங்கிணைப்பாளர் கைடோ டொலரா, ஐரோப்பிய ஒன்றிய வேலைவாய்ப்பு, சமூக விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரிவுத் தலைவர் லூயிஸ் ப்ராட்ஸ், ஸ்ரீலங்கா மற்றும் மாலைத்தீவுக்கான ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவையின் அலுவலக அதிகாரி மோனிகா பைலெயிட் மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவை மனித உரிமைகள் கொள்கை அதிகாரி பவுலோ சல்வியா ஆகியோர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

உயர்மட்ட குழு செப்டம்பர் 27ஆம் திகதி நாட்டை வந்தடைவுள்ளதோடு, ஒக்டோபர் 5ஆம் திகதி வரை ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும்.

அரச உயர்மட்டம், தொழிற்சங்கங்கள், சிவில் சமூகம், முதலாளிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை குறித்த குழு சந்திக்க உள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது உட்பட மனித உரிமைகளுக்கு தீங்கு விளைவிப்பதால் ஸ்ரீலங்காவிற்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை இரத்து செய்யும் யோசனை உள்ளடங்கிய தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றியது.

மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டின் மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தால் செயல்படுத்தப்படாததால் பெப்ரவரி 2010 இல் முன்னுரிமை வரி சலுகையான (ஜிஎஸ்பி பிளஸ்) இடைநிறுத்தப்பட்டது, நல்லாட்சி அரசாங்கம், மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளை செயற்படுத்துவது குறித்த உத்தரவாத்திற்கு அமைய, நம்பிக்கையின் அடிப்படையில், 2017 மே மாதம் ஜிஎஸ்பி பிளஸ் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது.

எனினும் இந்த சலுகையை ஸ்ரீலங்காவிற்கு தொடர்ந்து வழங்குவது குறித்து ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments