இலங்கையில் பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்கள் ஏனையவர்களை சென்றடையும் அச்சம் காணப்படுகின்ற நிலையில், தனிப்பட்ட தரவுகளை பெறுவதை எளிதாக்கும் திட்டத்தை, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆளுநராக செயற்பட்ட மைத்திரி குணரத்ன முன்மொழிந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை, வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பல தனிப்பட்ட விபரங்களைச் சேர்க்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் மேலும் விரிவாக்கப்பட வேண்டும் என்றும், இதில் வாக்காளர்களின் தொழில் விபரம், நிரந்தர முகவரி, வருமான மூலம், தொலைபேசி இலக்கம், திருமண நிலை, சொந்தமாக உள்ள வாகனம், வீடு தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான நாடாளுமன்ற விசேட குழுவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக் குழு, சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் கூடியது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு சகல இனங்களினதும் பிரதிநிதித்துவம் அவசியம் எனவும், வடக்கில் இடம்பெற்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாமையே காரணமாக அமைந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் முறைமையானது நியாயமான மற்றும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும், மேசடியற்றதாகவும் அமைய வேண்டுமென அவர் தெரிவித்தார்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையே நாட்டுக்குப் பொருத்தமானது என தமிழர் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இக்குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
சிதறியுள்ள இனக்குழுக்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் அவசியம் எனவும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலேயே இதனை அடைய முடியும் எனவும் அவர் நாடாளுமன்ற விசேட குழுவில் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் வாக்காளர்களினால் வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கிற்கும் உரிய மதிப்புக் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் பலப்படுத்தப்பட்டு அதன் சுயாதீனத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் பாராளுமன்ற விசேட குழுவின் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
தற்பொழுது நடைமுறையில் உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை பலவீனமான மட்டத்தில் இருப்பதாகவும், இது திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் இக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபான்மையினத்தவரின் உரிமை பாதுகாக்கப்படும் வகையில் தேர்தல் முறைமை பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.
இக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால.டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர திஸாநாயக, ரஞ்சித் மத்துமபண்டார, கபீர் ஹாசிம், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எல்லை நிர்ணய ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற நிறுவனங்ளின் அதிகாரிகளும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.