துப்பாக்கிச் சூடு அதிகாரத்தை ஆயுதப் படைகளுக்கு வழங்குவது ‘சட்டவிரோதம்’

0
Ivory Agency Sri Lanka

தனிநபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை ஆயுதப் படைகளுக்கு வழங்குவதற்கான சட்டப்பூர்வத்தன்மை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவை இல்லாத நிலையில், அவ்வாறான உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுச் சொத்துக்களை அழித்தல் அல்லது நபர்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சுடுமாறு பாதுகாப்பு அமைச்சு ஆயுதப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மே 12 ஆம் திகதி காலை 7 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2279/13 மாத்திரமே அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஆகும். யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அனுமதிப்பது பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை.

இந்தியாவின் இந்து நாளிதழுக்கு செவ்வி வழங்கிய இலங்கை இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் நளின் ஹேரத், துப்பாக்கிச் சூடு உத்தரவு பாதுகாப்புச் செயலாளரால் பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

எனினும் அது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

“சட்டவிரோதமானது! அரசியலமைப்பின் 52 (3) பிரிவிற்கு அமைய அமைச்சரவை கலைக்கப்பட்டவுடன் அனைத்து செயலாளர்களுக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை” என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி ட்வீட் செய்துள்ளார்.

இராணுவத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, அரசாங்கம் இராணுவ ஆட்சிக்கு தயாராகி வருவதாக எதிர்ப்பாளர்களும் எதிர்க்கட்சித் தலைவரும் அச்சமடைந்துள்ளனர்.

கோபம் கொண்டவர்கள் என்ற போர்வையில் இராணுவ ஆட்சியை ஸ்தாபிக்க அரசாங்கம் வன்முறையை தூண்டி வருவதாக குற்றம் சுமத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துப்பாக்கியால் அல்ல சட்டத்தின் ஆட்சி அரசியலமைப்பின் மூலம் நிலைநாட்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடு முழுவதும் இருந்து பேரூந்துகளை அனுப்பி, ஆதரவாளர்களை அலரிமாளிகையில் ஒன்று திரட்டி அவர்களை அனுப்பி ‘கோட்டாகோகம’ மற்றும் ‘மைனகோகம’ மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இனவாதத்தை தூண்டி இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்ப்பினை தவறாக பயன்படுத்தும் என தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் உள்ளிட்ட போராட்டத்தின் தலைமை அரசாங்க எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Facebook Comments