ஆசிரியர் தலைவர்களை சிஐடிக்கு அழைப்பது ‘அரசின் சூழ்ச்சி’

0
Ivory Agency Sri Lanka

இலங்கையில் கடந்த இரண்டரை மாதங்களாக தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு ஆசிரியர்களை குற்றப்புலனாய்வு பிரிவு (சிஐடி) விசாரணைக்கு அழைத்தமை அரசாங்கத்தின் சூழ்ச்சி என ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆசிரியர்-அதிபர் சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி அனைத்து ஆசிரிய, அதிபர்களும் 2021 ஜூலை 12 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இது தற்போது 71 நாட்களாக தொடர்கின்றது.

இந்த நிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதியான இன்று குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட, இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் மோகன பராக்கிரம வீரசிங்க மற்றும் சுதந்திர கல்வி ஊழியர் சங்க உறுப்பினர் ஒருவரும், காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் அங்கு இருந்துள்ளனர்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைப்பதானது, ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்தும் பொதுக் கல்வி ஊழியர் சங்கத்தின், அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இடம்பெறும் ஒரு சூழ்ச்சியென ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

செப்டெம்பர் 16ஆம் திகதி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும், பொது கல்வி ஊழியர் சங்கங்கத்தின் சில உறுப்பினர், அமைச்சர் சரத் வீரசேகரவிடம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக முறைப்பாடு செய்திருந்தனர்.

அதன்பின்னர், செப்டெம்பர் 17ஆம் திகதி, அமைச்சர் சரத் வீரசேகர ஊடக சந்திப்பை நடத்தி, ஆசிரியர் – அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஒரு பயங்கரவாத செயல் எனவும், வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுத் தொடர்பில் தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், இதுத் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்ற அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் 119 அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அன்றைய தினமே ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புகளை அடுத்து, அதிபருக்கும் ஆசிரியருக்கும் செப்டெம்பர் 18ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருமாறு வருமாறு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.

“அவர்கள் இன்றைய தினம் வரமுடியும் என அறிவித்துள்ளனர். பின்னர் பொலிஸார் அவர்களது வீடுகளுக்கு சென்று அறிவித்தல் விடுத்துள்ளனர். இதற்கமையஅவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டனர்.”

”தொழிற்சங்க விதிமுறைகளுக்கு அமைய, ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தெரிவிக்க சட்டப்பூர்வ உரிமை உள்ளது. மேலும் அனைத்து ஆசிரியர்களின் அதிபர்களும் தாமாக முன்வந்து தொழிற்சங்க நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.” என செப்டெம்பர் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜோசப் ஸ்டாலின் மற்றும் மஹிந்த ஜயசிங்க, இரண்டு சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து விமர்சிக்கும் பொது கல்வி ஊழியர் சங்கத்தின், அரசின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியின் விளைவால், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள, ஆசிரியர் சங்கத் தலைவர்கள், பொலிஸில் முறைப்பாடு செய்யாமல் அமைச்சர் சரத் வீரசேகரவிடம் முறைப்பாடு செய்வதன் ஊடாக இது தெளிவாவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோன்ற சூழ்ச்சிகளால் ஆசிரியர்களின் முதன்மை போராட்டத்தை நிறுத்தவோ அல்லது ஆசிரியர், அதிபர்களை அச்சுறுத்தவோ முடியாது என வலியுறுத்தியுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு, ”இத்தகைய நாடகங்களை நிறுத்தி” ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் நியாயமான தீர்வை முன்வைக்குமாறு கோரியுள்ளது.

Facebook Comments