வில்பத்து அண்மித்த அழிவில் அரசியல்வாதிகளின் தலையீடு அம்பலம்

0
Ivory Agency Sri Lanka

வில்த்து தேசிய பூங்காவின் இடை வலய வனப் பிரதேசம் (Buffer zone) அரசியல்வாதிகளின் உதவியுடன் மேலும் அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் குழு குற்றம் சாட்டுகிறது.

கற்றாழை பயிர் செய்கைக்காக, வில்பத்து தேசிய பூங்காவில் இடை வலயப் பிரதேசங்கள் மேலும் அழிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய, வில்பத்து தேசிய பூங்காவின் இடை வலயத்தின், ராஜாங்கனய யாய 18 கிராமத்தில் அமைந்துள்ள வனப் பிரதேசம், வரையறுக்கப்பட்ட அவுரா லங்கா தனியார் நிவனத்தால் அழிக்கப்பட்டுள்ளதாக, இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர், ரவீந்திர கரியவாசம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடை வலய பிரதேசத்தில் சுமார் 1,300 ஏக்கர் காடு அழிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கற்றாழை தோட்டம், ஒரு ஆராய்ச்சி நிறுவனம்,, ஒரு பெரிய விளையாட்டு மைதானம், ஒரு தோட்டம் மற்றும் ஒரு தொழிற்சாலைக்கு வில்பத்து தேசிய பூங்கா இடை வலயம் அழிக்கப்பட்டுள்ளது.”

தேசிய பூங்காவின் இடை வலயப் பிரதேசம் கடந்த வருடம் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு ஒரு குளம் உருவாக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

இது தவிர, தேசிய பூங்காவின் இடை வலய வனப் பிரதேசம், கற்றாழையை பயிரிடுவதற்காக அழிக்கப்பட்டு வரும் விடயம் தொடர்பில், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் கண்காணிப்புக் குழு கடந்த 19ஆம் திகதி ஆய்வினை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தேசிய பூங்காவில் ஒரு இடை வலயத்தை அழிப்பது விலங்கின மற்றும் தாவர கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றமாக இருந்தாலும், வில்பத்து தேசிய பூங்கா இன்னும் அரசியல்வாதிகளின் உதவியுடன் அழிக்கப்பட்டு வருவதாக இயற்கை ஆய்வு மையம் சுட்டிக்காட்டுகிறது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வில்பத்து வனப்பகுதியை சுற்றியுள்ள பிரதேசம் பல்லுயிர் அடிப்படையில் மிகவும் வளமான பகுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான ஆராய்ச்சியில் இதுவரை, 41 வகையான பாலூட்டிகள், 29 வகையான மீன்கள், 17 வகையான தவளைகள் மற்றும் 149 வகையான பறவை இனங்கள் காணப்படுகின்றமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கற்றாழை பயிர்செய்கை திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதி யானைகள் மற்றும் பிற விலங்குகளின் தாயகமாகும் என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மையம் கூறுகிறது.

“யானைகள் வசிக்கும் இந்த பகுதியில், ராஜாங்கனய யாய 18 கிராத்தை அண்மித்து அமைந்துள்ள யானை பாதை பயிர் செய்கைக்காக அழிக்கப்படுவது யானைகளின் உயிர்வாழ்வுக்கு கடுமையான தடையாக இருப்பதோடு, சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.”

வில்பத்து தேசிய பூங்காவின் நீரூற்றுகள் மற்றும் மழை நீரால் நிரம்பும் பணன்கானி கால்வாய் குறுக்காக மணல் மேட்டால் சுவர் எழுப்பி, கற்றாழை திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள குளத்திற்கு நீரை திருப்புவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவீந்திர கரியவாசம் குற்றம் சாட்டியுள்ளார். .

வில்பத்து தேசிய பூங்காவின் இடை வலையத்தை அழித்து, அவுரா லங்காவால் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த செயன்முறை இலங்கையின் சுற்றுச்சூழல் சட்டத்தின் கடுமையான மீறலாகும் என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் சுட்டிக்காட்டுகிறது.

சுற்றுச்சூழல் சட்டத்தையும் நாட்டின் பொதுவான சட்டத்தையும் புறந்தள்ளி வில்பத்து தேசிய பூங்காவில்
காணிகளை நியாயமற்ற முறையில் ஒரு நிறுவனம் கொள்ளையடித்த போதிலும் அதிகாரிகள் மௌனமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவீந்திர கரியவாசம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Facebook Comments