கொடிய தொற்று நோயிலிருந்து நாட்டு மக்களை மீட்பதில் உறுதியாக உள்ள சுகாதார ஊழியர்களின் தேவைகளை விவாதிக்க கூட அதிகாரிகள் அவகாசம் அளிக்காத நிலையில், சுகாதார அமைச்சர் போராட்டங்களை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளர்.
“பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளை” முன்னிறுத்தி போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுவதை “அங்கீகரிக்க மாட்டேன்” என, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல செவ்வாய்க்கிழமை (05) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடலுக்காக சுகாதார ஊழியர்களால் எழுதப்பட்ட கோரிக்கைக்கு எந்த பதிலும் அளிக்காமல் அமைச்சர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அண்மையில், சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கக்கூட சந்தர்ப்பம் அளிக்காததன் ஊடாக, அமைச்சர் சுகாதார ஊழியர்களை நடத்தும் விதம் குறித்து அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எழுதிய கடிதத்தில், சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அண்மைய போராட்டங்களால் நாடு சீரழிந்துள்ளதாக கூறிய அமைச்சர், இந்த நேரத்தில் நாடு மற்றும் நாட்டு மக்கள் பற்றி சிந்தித்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமென கேட்டுக் கொண்டார்.
“கடந்த காலங்களில் இதுபோன்ற 800ற்கும் மேற்பட்ட போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த நிலைமை மிகவும் கசப்பானது எனவும், அமைச்சரின் ஊடக செயலாளர் இந்திக பொல்கொட்டுவ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் நிபுணர் முதல் பொது வைத்தியர் வரை அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய்களின் போது நாட்டில் நிலவும் பொருளாதார நிலை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொற்று நோயிலிருந்து நாட்டு மக்களை மீட்பதில் உறுதியாக உள்ள சுகாதாரப் பணியாளர்களின் தேவைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்கு எதிராக மீண்டும் ஒருமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப்போவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எழுதிய கடிதத்தில், சுகாதாரத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமது பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ஒக்டோபர் 8ஆம் திகதி முழுநாள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் நாடு தழுவிய பிரச்சாரத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அந்த கூட்டமைப்பு கூறியுள்ளது.
“சுகாதார சேவை ”ஹீரோக்கள்” என பெய்யாக பெயரிட்டு, தேவையான நிவாரணம் இல்லாமல் அவர்கள் எப்படி சரியான சிகிச்சை மற்றும் கவனிப்பை தொடர்ந்து வழங்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.”
போராட்டத்திற்கு முன்னதாக, சுகாதார ஊழியர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வு கிடைக்குமென சுகாதார தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
இந்தக் கடிதத்தில் ரவி குமுதேஷ், சமன் ரத்னப்ரிய, உபுல் ரோஹன, டபிள்யூ.ஏ.டி விமலரத்ன, நாமல் ஜெயசிங்க, தர்மகீர்த்தி எப்பா, தேவிகா கொடிதுவக்கு, ரோய் டி மெல் மற்றும் உதேனி தசநாயக்க ஆகியோர் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கையெழுத்திட்டுள்ளனர்.