வருடத்திற்கு ஒருமுறை இந்திய-இலங்கை கத்தோலிக்கர்கள் புனித யாத்திரைக்கு வரும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் வருடாந்தம் நடைபெறும் திருவிழாவில் பௌத்த பிக்குகள் குழு ஒன்றும் பங்கேற்றுள்ளது. முன்னர் எப்போதும் நிகழ்ந்திராத வகையில் இது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தின் ஆதரவுடன் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில், ஆறு பௌத்த பிக்குகள் தீவில் சுற்றித் திரிவதை ஊடகவியலாளர்கள் கமெராவில் படம்பிடித்துள்ளனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுளை மேற்கொண்ட இலங்கை கடற்படையினர் இது பற்றிய எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பதோடு கத்தோலிக்க பக்தர்கள் தீவிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் அதே காலகட்டத்தில் பௌத்த பிக்குகள் எந்த நோக்கத்திற்காக அங்கு வந்தார்கள் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கொழும்பு உதவி ஆயர் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகத்தின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலாளர் ஏ. சிவபாலசுந்தரம் மற்றும் கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் அமைப்பாளர்களின் பங்களிப்பின் பெருந்திரளான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன், 2023 மார்ச் 03 மற்றும் இன்று (2023 மார்ச் 04) வெகு விமரிசையாக நடைபெற்றது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவுக்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள், முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைத் தலைவருமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு), இலங்கை மற்றும் இந்திய பாதிரியார்களான பிரசாத்தீன், அரச அதிகாரிகள், விசேட பிரமுகர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஊடகவியலாளர்கள், இலங்கை கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் அதிகாரிகள், முப்படைகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்துகொண்டதாக இலங்கை கடற்படையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கடற்படையினரின் உதவியுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது” என்ற தலைப்புடன் இலங்கை கடற்படை தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள 64 புகைப்படங்களில் ஒன்றில் மாத்திரம் பௌத்த பிக்கு ஒருவர் படகில் இருந்து இறங்கி வருவதை காணமுடிகிறது.