யானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது, அரசாங்கத்துடன் போராடும் விவசாயிகள்

0
Ivory Agency Sri Lanka

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம், காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி தென்னிலங்கை விவசாயிகள் குழு ஒன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காட்டு யானைகளின் பிரச்சினைக்கு தீர்வு காணவும், காட்டு யானை முகாமைத்துவ பிரதேசத்தை வர்த்தமானியில் வெளியிடவும் கோரி 86 விவசாயிகள் ஜனவரி 18ஆம் திகதி முதல் சூரியவெவ பிரதேசத்தில் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்திருந்தனர்.

எனினும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தாத நிலையில், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஜனவரி 20 புதன்கிழமை முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட காட்டு யானை முகாமைத்துவ வனப் பிரதேசத்தை வர்த்தமானியின் ஊடாக வனவிலங்குத் திணைக்களத்திடம் ஒப்படைக்க 2010 முதல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

எனினும் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள ஐக்கிய விவசாயிகள் அமைப்பின் செயலாளர் சமன் சுதர்ஷன ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லையெனத் தெரிவித்தார்.

”முன்மொழியப்பட்ட காட்டு யானை முகாமைத்துவ வனப் பிரதேசத்தை உடனடியாக வர்த்தமானியில் வெளியிடுதல். செயலிழந்துள்ள மின்சார வேலியை மாற்றி ஒரு வலுவான மின்சார வேலியை அமைத்தல். காட்டு யானைகளை அபிவிருத்தி பிரதேசத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றுதல். வெளியேற்றப்படும் நீர் குறித்து மகாவலி அதிகாரிகள் எடுத்த தன்னிச்சையான முடிவுகளை உடனடியாக மீளப்பெறவும், உத்தேச யானை முகாமைத்துவ பகுதியில் உள்ள பழைய கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு மாற்று நிலங்களை வழங்குதல், கால்நடை உரிமையாளர்களுக்கு மேய்ச்சல் நிலங்களை வழங்குதல் மற்றும் ஹம்பாந்தோட்டையில் நில அபகரிப்பை உடனடியாக நிறுத்துதல்.” ஆகியவை விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளாக அமைந்துள்ளது.

யானைகள் வர்த்தமானி

யானை வனப் பிரதேசம் குறித்த வர்த்தமானி தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை பெப்ரவரி முதல் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக, வனவிலங்கு அமைச்சர் சீ.பி ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக, தொடர் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்துள்ள ஹம்பாந்தோட்டை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஜனவரி 11ஆம் திகதி விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பங்களிப்புடன் நடைபெற்ற கூட்டத்தில் காட்டு யானை காப்பகத்தை வர்த்தமானி செய்வதற்கான திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

காட்டு யானை பிரதேசத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும், “சில நிபந்தனைகள்” குறித்து மேலதிக கலந்துரையாடல்கள் மற்றும் முடிவுகள் எடுக்கப்படவுள்ளதால் விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் எனவும், எதிர்காலத்தில் ஒரு நிரந்தர தீர்வு திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளா

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மனித-யானை மோதல்

இலங்கையில் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் பத்தொன்பது இடங்களில் மனித-யானை மோதல்கள் காணப்படுவதை அரசாங்கம் சமீபத்தில் ஏற்றுக்கொண்டது.

இலங்கையின் 19 மாவட்டங்களில் 133 பிரதேச செயலக பிரிவுகளில் தற்போது மனித-யானை மோதல்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் பாதுகாப்பு வேலிகள் மற்றும் மின்சார வேலிகள் அமைத்து வருகிறது, இந்த வேலிகளுக்கு பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட தண்டவாளங்களைப் பயன்படுத்துவதற்கு கடந்த வருடம் அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பரில், 133 பிரதேச செயலக பிரிவுகளில் சுமார் 4,500 கிலோமீற்றர் மின்சார வேலிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது, அதேவேளை, மேலும் 1,500 கிலோ மீற்றர் மின்சார வேலிகள் மற்றும் பாதுகாப்பு வேலிகளுடன் கூடிய காட்டு யானை தடுப்பு நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலிகளை அமைக்க தற்போது மர தூண்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், அவை பெரும்பாலும் காட்டு யானைகளால் தள்ளி வீழ்த்தப்படுகின்றன. இதற்கு மாற்றீடாக கொன்கிரீட் தூண்களைப் பயன்படுத்தினால் அதனை மீளமைப்பது சாத்தியமற்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனால், மாற்று தீர்வாக பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட தண்டவாளங்களைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது

ரயில்வே துறையின் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்ட பீளிகளை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு இலவசமாகப் பெற்றுக்கொள்ள வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மேற்கொண்ட முயற்சிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


ஜனாதிபதி ஆலோசனை

காட்டு யானைகளைத் தாக்குவதற்குப் பதிலாக, காடழிப்புக்கான ஒரு முறையை வகுத்து, இரண்டு வருடங்களுக்குள் மனித-யானை மோதலுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த வருடம் ஒக்டோபரில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மனிதனையும் யானையையும் பாதுகாக்கும் விரைவான மற்றும் நிரந்தர தீர்வைக் கண்டறிவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மனித நடவடிக்கைகள் காரணமாக யானைகள் வாழ்விடங்களை இழந்துள்ளன யானைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டில் காட்டு யானை வேட்டையாடியதால் 122 பேர் உயிரிழந்துள்ளதோடு, 407 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

2020 முதல் எட்டு மாதங்களில் 62 மனித உயிர்கள் பறிபோனது. இறந்த காட்ட யானைகளின் எண்ணிக்கை 200 ஆகும்.

Facebook Comments