அதிகாரப்பகிர்வு முன்மொழிவுகள் குறித்து த.தே.கூ அமெரிக்காவில் உயர்மட்ட பேச்சு

0
Ivory Agency Sri Lanka

அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பின் பதின் மூன்றாவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேச சக்திகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் நீட்சியாக உயர்மட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று எதிர்வரும் 10ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகஈஸ்வரன் மற்றும் சட்டத்தரணி கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரை முன்மொழிய, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தீர்மானித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் அமெரிக்கா தனது அபிலாஷைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை ஒப்புக்கொண்டுள்ளது.

ராஜபக்ச அரசாங்கத்தினால் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பை கருத்திற்கொண்டு அதிகாரப் பகிர்வுக்கான கூட்டாட்சி தீர்வு குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படும் என நாடாமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வாரஇறுதி ஆங்கில பத்திரிகைகளுக்கு தெரிவித்திருந்தார்.

“எமது அரசியல் அபிலாஷைகள் என்னவென்பதையும், அமெரிக்காவைப் போன்று ஏனைய நாடுகளில் உள்ள கூட்டாட்சி கட்டமைப்புகளை ஆராய்ந்து பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வைக் காண்பது என்து தொடர்பில் தெளிவுபடுத்த உத்தேசித்துள்ளோம்.” என என சுமந்திரன் கூறியுள்ளார்.

மாகாண சபைகளின் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தலைமைத்துவ கலந்துரையாடலைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

2011ஆம் ஆம் ஆண்டு, ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்து, இராஜாங்க திணைக்களம் மற்றும் ஐ.நா செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளைச் சந்தித்ததோடு, அரசியல் கோரிக்கைகளுக்கான ஆதரவையும் கோரியிருந்தனர்.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச 2010ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த போது 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று “13 பிளஸ்” என்ற அடிப்படையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென அறிவித்திருந்தார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்று கூடி 13வது திருத்தச் சட்டத்தை அங்கீகரிப்பது தொடர்பில் இணக்கம் தெரிவித்துள்ளதாக, கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோருடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்திருந்தார்.

Facebook Comments