தென்னிலங்கையின் பிரதான ஊடகவியலாளர்கள் பொலிஸுக்கு அழைக்கப்பட்டமைக்கு எதிராக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்து ஒரு மாத காலத்துக்குள், காலனித்துவ காலத்தில் செயற்பட்ட நாய் வரியை மீண்டும் அமுல்படுத்தும் முயற்சியை நாட்டுக்கு வெளிப்படுத்தியதற்காக மூன்று ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று, தம்புள்ளை மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிவித்தல் ஒன்று தொடர்பில் மூன்று ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இலத்திரனியல், அச்சு மற்றும் இணைய ஊடகவியலாளர்களான மஹிந்த உதயசிறி, சரத் எரமினிகம்மன மற்றும் லக்சஜத விஜேசேகர ஆகிய மூவருக்கும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அழைப்பின் பேரில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) கொழும்பு வந்த ஊடகவியலாளர் சரத் எரமினிகம்மன, தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத செப்டெம்பர் 10ஆம் திகதி செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் தங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ஊடகவியலில் ஈடுபட முடியாது என வலியுறுத்திய சரத் எரமினிகம்மன இதுதானா நாட்டின் ஜனநாயகமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
“இப்போது ஊடகவியலாளர்களாகிய எங்களால் ஊடகங்களைக் கையாள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அனைத்து விடயங்கள் தொடர்பிலும், சி.ஐ.டி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளிடம் சென்று முறைப்பாடு செய்வதால், அவர்களிடமும் அனுமதியைப் பெற்றுதான் ஊடக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.”
இது மிகவும் சோகமான நிலை என ஊடகவியலாளர் சரத் எரமினிகம்மன மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஐலண்ட் மற்றும் லங்காதீப ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்ட போது, அதனைத் தடுக்க நடவடிக்கை எடுத்த ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும மன்னிப்பும் கோரியிருந்தார்.
ஊடகவியலாளர்களை ஒருபோதும் பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கக் கூடாது என பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகரவும் கூறியதாக அமைச்சர் அழகப்பெரும ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
மஹிந்த உதயசிறி, சரத் எரமினிகம்மன, லக்ஷித விஜேசேகர ஆகியோரின் விடயத்தில் ஊடகத்துறை அமைச்சர் தலையிட்டாரா என்பது தெரியவில்லை.
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களான நவரத்தினம் கபிலநாத் மற்றும் யு. எல். மப்ரூக் பயங்கரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதுவரை மௌனம் காக்கின்றமை குறிப்பிடத்தக்கது.