தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்ட அரசாங்கம் மேற்கோள் காட்டிய புள்ளிவிபரங்களை கேலி செய்துள்ள பேராசிரியர் ஒருவர், சுகாதார சேவைகள் பணிப்பாளரை மீண்டும் க.பொ.த சாதாரண தர கணிதப் பாட பரீட்சைக்கு தோற்ற வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளார்.
இலங்கையின் கொரோனா கட்டுப்பாட்டு வெற்றியைக் காண்பிப்பதற்காக 130,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கடந்த வாரம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் முன்னாள் பேராசிரியரான சிசிர பின்னவல இந்த தகவலை சமூக ஊடகங்களில் கேலி செய்ததோடு, சுகாதார சேவைகள் பணிப்பாளரை ”மீண்டும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற வேண்டுமென” பரிந்துரைத்துள்ளார்.
”130,000 என்பது மக்கள் தொகையில் 0.6% அல்லது ஒரு மில்லியனுக்கு 5,900 ஆகும். எங்களுடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.7% அல்லது ஒரு மில்லியனுக்கு 138,000 ஆகும். இந்தியா ஒரு மில்லியனுக்கு 0.9 சதவீதம் அல்லது 9,400 ஆக நமக்கு முன்னால் உள்ளது. இந்நிலையில் நாம் வெற்றிகரமாக செயற்பட்டுள்ளோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நினைப்பாராயின், அவர் மீண்டும் க.பொ.த சாதாரண தர கணிதப் பாடப் பரீட்சைக்கு தோற்ற வேண்டும்” என பேராசிரியர் பின்னவல ட்வீட் செய்துள்ளார்.
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் முன்னாள் பேராசிரியரான சிசிர பின்னவல, தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கை பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டுச் செல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்ட ஆய்வறிக்கையை, சமர்ப்பித்தவர்களில் ஒருவராவார்.
”கொரோனா தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பார்வை” என்ற இந்த ஆய்வை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான இலட்சுமன் கதிர்காமர் நிலையத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி கணேசன் விக்னராஜா ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ச ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஆய்வறிக்கையின் நகலை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
Link – https://www.facebook.com/pathfinderfoundation/photos/?tab=album&album_id=3470425416318386&__tn__=-UC-R