பிரதமர் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் பிரதான பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் பொதுமக்களை சங்கடப்படுத்தும் வகையில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
வடமேல் மாகாணத்தின் தலைநகரான குருநாகலுக்கு வருகை தரும் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட வெற்று இடத்தில் 31 பேருக்கு கடைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்கு குழுவில் தெரியவந்துள்ளது.
பொதுக் கணக்குகள் தொடர்பான குழு நவம்பர் 10ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியது. நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இந்தக் குழுவின் தலைவராக உள்ளார்.
மாநகர சபை இந்த நிர்மாணங்களை பொருளாதார உற்பத்திக்கான வழிமுறையாக வரையறுத்துள்ள போதிலும், அவை பொது நலனுக்கு பாதகமானவை என தெரியவந்துள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பேருந்து நிலையத்துக்காக தயாரிக்கப்பட்ட அடிப்படை திட்டத்திற்கு புறம்பாக இந்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு சரியான முறையில் கடைகள் வழங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும், குருநாகல் மத்திய சந்தையை நிர்மாணிப்பதற்காக, மாநகர சபையின் பொறியியல் மதிப்பீட்டை விட 41% அதிகமாக, அதாவது 281,934,447 ரூபாவை சமர்ப்பித்த விலைமனுதாரருக்கு ஒப்பந்தங்களை வழங்கியமைத் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கும் போது, தயாரிக்கப்பட்ட முதல் பொறியியல் மதிப்பீடு சரியாகத் தயாரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
கட்டிடத்திற்கான அனைத்து தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பான மதிப்பீட்டை தயாரித்த பொறியியல் திணைக்கள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, ஷெஹான் சேமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேசிங்க, குணபால ரத்னசேகர, காதர் மஸ்தான், வீரசுமண வீரசிங்க, கலாநிதி உபுல் கலப்பத்தி ஆகியோர் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.