டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் நாட்டில் உள்ள 50ற்கும் மேற்பட்ட உயர் பெறுமதிமிக்க காணிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
இவற்றில் சில காணிகள் கடந்த காலங்களில் குத்தகைக்கு தயார்படுத்தப்பட்டபோதிலும், கொள்வனவு செய்பவர்கள் முன்வரவில்லை ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த காணிகள் அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சிகள் அல்லது கூட்டு முயற்சிகளுக்கு கையளிக்கப்படும் எனவும், அதில் 51 வீதமானவை அரசாங்கத்தின் வசம் இருக்கும் எனவும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறினிமல் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தலைநகர் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நிலங்களில் இருந்து 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
முன்னதாக, ஓமானில் உள்ள ஷுமுக் முதலீட்டு மற்றும் சேவை நிறுவனம், கொழும்பு சார்மர்ஸ் களஞ்சியம் மற்றும் விமானப்படைத் தலைமையகம் அமைந்துள்ள ஒன்பது ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த எதிர்பார்த்தது, ஆனால் அது நிறைவேறவில்லை.
எவ்வாறாயினும், அந்த காணிகளுக்கு மேலதிகமாக குத்தகைக்கு புதிய காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொழும்புத் தகவல்களுக்கு அமைய, சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட கொழும்பு 5இல் அமைந்துள்ள 10 ஏக்கர் நிலம், வொக்ஸ்ஹால் வீதி மற்றும் டி.ஆர். விஜேவர்தன மாவத்தை ஆறு ஏக்கர், கொள்ளுப்பிட்டி மற்றும் , நுகேகொடை பொதுச் சந்தைகளில் ஆறு ஏக்கர், நான்கு ஏக்கர் கொண்ட புறக்கோட்டை உலக சந்தை, இராஜகிரிய, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்லை ஆகிய இடங்களில் தலா மூன்று ஏக்கர், நுவரெலியா மற்றும் கண்டியில் காணிகள் மற்றும் ஏகலையில் ஐம்பத்தைந்து ஏக்கர் காணி என்பன இந்த குத்தகை காணி பட்டியலில் உள்ள சொத்துக்களில் அடங்கும்.
வெலிக்கடை சிறைச்சாலை சொத்துக்களுக்காக கொரிய முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு பதிலாக, ஹொரணையில் புதிய சிறைச்சாலையொன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கலப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், அடுக்குமாடி வளாகங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஓய்வு விடுதித் திட்டங்கள், பொருட்கள் கையாளும் மையங்கள் அல்லது பல மாடி வாகன நிறுத்துமிடங்களுக்கு நிலம் 33, 50 அல்லது 99 வருடங்களுக்க குத்தகைக்கு விடப்படும்.
நகர அபிவிருத்தி அமைச்சு தொடர்புடைய திட்டங்களுக்கு கடன் மற்றும் உதவிகளை வழங்கும். இருப்பினும், குத்தகை காலம் தொடங்கி இரண்டு வருடங்களுக்கு திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், நிலம் மீண்டும் கையகப்படுத்தப்படும்.
எவ்வாறெனினும் இந்த விடயத்தில் கொள்வனவாளர்கள் அதிக ஆர்வம்காட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரில், முதலீட்டுக்கான அனைத்து உட்கட்டமைப்புகளுடன் கூடிய இடங்கள் போட்டித் தன்மையுடன் வழங்கியமையும் இதற்கு ஒரு காரணமாகும். இதற்கிடையில், கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சந்தை தற்போது நிரம்பி வழிகிறது.
எவ்வாறாயினும், நகர அபிவிருத்தி அதிகாரசபை நவம்பர் 25 அன்று பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜில் (Waters Edge) “இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த” மற்றொரு முதலீட்டு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது.
கலப்பு வளர்ச்சித் திட்டங்கள், அடுக்குமாடி அபிவிருத்தி, விருந்தோம்பல் மற்றும் ஓய்வு விடுதி அலுவலக வளாக அபிவிருத்தி, பொருட்களை கையாளும் மைய அபிவிருத்தி மற்றும் பல மாடி வாகன தரிப்பிட அபிவிருத்தி ஆகியவற்றுக்கான முன்னணி சொத்துக்கள் வர்த்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.
இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தபோது, வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கு தற்போதைய நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் ஆராயும் எனத் தெரிவித்தார்.
ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள் உள்ளூர் மற்றும் சர்வதேச மூலங்கள் மூலம் கலப்பு அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் பரிசீலிக்கப்பட வேண்டுமென அவர் பரிந்துரைத்தார்.