தொற்றுநோயினால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தன்னிச்சையாக விதித்த தடையை நீக்கியதன் பின்னர் முதன்முறையாக கொழும்பில் கொவிட் நோயினால் உயிரிழந்த முஸ்லிம் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 2021 இல், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமர்சனங்களை மீறி ஒரு வருடமாக நடைமுறையில் இருந்த அனைத்து கொவிட் உடல்களையும் வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கையை அரசாங்கம் மாற்றி, மட்டக்களப்பு ஓட்டமாவடி மஜ்மா நகரில் உள்ள முஸ்லிம்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் மாத்திரமே அடக்கம் செய்யப்பட்டது.
ஒரு வருடம் கழித்து தடை நீக்கப்பட்டது. இதற்கமைய, தொற்று நோயினால் உயிரிழந்த அன்பானவரின் சடலம், ஓட்டமாவடிக்கு வெளியே முதன்முறையாக கடந்த மார்ச் 13ஆம் திகதி மாளிகாவத்தை முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதியாக மார்ச் 4 ஆம் திகதி ஓட்டமாவடி மயானத்தில் ஒரு சடலம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த ஆண்டில் அங்கு புதைக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 3,634 ஆகும். 2,992 முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், 287 பௌத்தர்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் அன்வர் ஹம்தானி வெளியிட்டுள்ள உத்தியோகர்வ புள்ளிவிவரங்களுக்கு அமைய, 2,225 ஆண்களும், 1,409 பெண்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 270 பேர் இந்துக்கள் மற்றும் 85 பேர் கிறிஸ்தவர்கள்.
300ற்கும் மேற்பட்ட கொவிட் உடல்கள் இஸ்லாமிய சடங்குகளைப் பின்பற்றி அடக்கம் செய்யக் கூட அனுமதிக்கப்படாமல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் ஆர்வலர்கள் மதிப்பிடுகின்றனர். அவர்களில் பிறந்து 20 நாட்களேயான குழந்தை ஷெயிக்கின் உடலும் உள்ளடக்கம். வலுக்கட்டாயமாக தகனம் செய்வது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு குற்றமாக இருந்தபோதிலும், அழுதுகொண்டிருந்த பெற்றோரின் வேண்டுகோள்கள் இருந்தபோதிலும், அது அரசாங்கம் உட்பட கடும்போக்குவாதிகள் மற்றும் பெரும்பான்மையான முக்கிய ஊடகங்களால் அங்கீகரிக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு மாறாக, கோட்டாபய ராஜபக்ச நிர்வாகம் 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து கொவிட் உடல்களை தகனம் செய்வதை கட்டாயமாக்கியது. அதை நியாயப்படுத்தும் வகையில், அரசு நியமித்த நிபுணர்கள் குழு, கொவிட் தொற்றுக்கு உள்ளான உடல்களை புதைப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுவதாகக் கண்டறிந்தது. உலகப்புகழ் பெற்ற வைரஸ் குறித்த பேராசிரியர் மலிக் பீரிஸ் உள்ளிட்ட அறிஞர்களால் இது அடிப்படையற்ற அறிவியலற்ற அபத்தம் என நிராகரிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை.
உலக சுகாதார அமைப்பு மற்றும் இஸ்லாமிய சடங்குகளின் பரிந்துரைகளுக்கு மாறாக கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்து, தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பான அரச அதிகாரிகளும், முக்கிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டி, இனவாதக் கொள்கையை கடைப்பிடித்ததாக, ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கை ஒரு இனத்தை மையமாகக் கொண் கொள்கையெனக் கண்டித்து ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு எதிரான முதலாவது மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டமானது, 2021 பெப்ரவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களும், தமிழ் அரசியல்வாதிகளின் தலைமையில், பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையிலான 700 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்டமைந்த P2P எனப் பெயரிடப்பட்ட பேரணியின் போது, முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்ததற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சில நாட்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்ததையடுத்து ஓட்டமாவடி மயானத்தில் மாத்திரம், காரணமேயின்றி சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியது.
காரணம் ஜெனீவாவில் இருந்து வந்தது
போர்க்குற்றங்கள் உட்பட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனக் கோரும், 23 மார்ச் 2021 அன்று கொண்டுவரப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு, இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், அதற்கு எதிராக வாக்களித்ததன் மூலம் பாகிஸ்தான் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டது.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச ஆய்வுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் முன்னிற்பது, அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலைக் கோரும் தமிழ் சமூகத்தின் நியாயமான போராட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என, முஸ்லிம் இடதுசாரி முன்னணி உட்பட பல அமைப்புகள், பிரதமர் இம்ரான் கான் இலங்கையில் தங்கியிருந்த போது அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தன.
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஓட்டமாவடி மயானத்திற்கு வெளியே சடலங்களை அடக்கம் செய்யவுள்ளதாக அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது.
வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் விஞ்ஞானப்பூர்வமற்ற கொள்கையினால் மிகவும் வேதனையடைந்துள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்படும் என்பதை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.