யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த பின்னர் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் கதி என்ன என்பது பற்றிய உண்மையை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, இறப்பு சான்றிதழ் மற்றும் இழப்பீடு வழங்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு தொடர்ந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு எவ்வாறு வழங்குவது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ் உறவுகளால் நிராகரிக்கப்பட்ட நட்டஈடுகளுக்காக செலவிடப்படும் பணத்தை பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடிமக்களின் பசியைப் போக்கப் பயன்படுத்துமாறு மன்னாரில் போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் வலியுறுத்துகின்றனர்.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 100,000 ரூபா நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும அண்மையில் தெரிவித்திருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மன்னார் மாவட்டத் தலைவர் மனுவேல் உதய சந்திரன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, “பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அரசாங்கம் எமக்கு எவ்வாறு இழப்பீடு வழங்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
“அரசாங்கம் உறுதியளித்த 100,000 ரூபாய் இழப்பீட்டை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இழப்பீட்டை பெற்றுக்கொள்ள நாங்கள் 13 ஆண்டுகளாக போராடவில்லை. எங்கள் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நட்டஈடு வழங்குவதன் மூலம் தாய்மார்களின் போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் மனுவேல் உதய சந்திரன் குற்றம் சுமத்துகின்றார்.
“எங்கள் பிள்ளைகளின் பெறுதி 100,000 ரூபாயா?” என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியபோது, அவர் வடக்கிலும் வன்னியிலும் தாய்மார்களின் கேள்வியை எதிரொலித்தார்.
”தற்போது எங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக, அந்த பணத்தை வைத்து டீசல், பெற்ரோல் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு, மக்களின் பசியைப் போக்க வேண்டும்.”
வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள தாய்மார்கள் ஏற்கனவே அரசாங்கத்தின் குறித்த ஒரு இலட்சம் இழப்பீட்டை நிராகரித்துள்ளனர்.