பதினேழு வருடங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நினைவேந்தல் நிகழ்வு வடக்கில் இடம்பெற்றுள்ளது.
2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (10) சாவகச்சேரியில் உள்ள அவரது நினைவு சிலைக்கு முன்பாக இடம்பெற்றதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் அக்கட்சியின் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ரவிராஜைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட கடற்படைப் புலனாய்வு அதிகாரி தெலிவலகெதர காமினி செனவிரத்ன மற்றும் புலனாய்வு அதிகாரி கண்காணம்கே பிரதீப் சர்மிந்த ஆகியோர் கொழும்பு ஹுனுப்பிட்டியவில் உள்ள பாதுகாப்பான இல்லத்தில் இயங்கியதாக வழக்கில் தெரியவந்தது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கடற்படை அதிகாரிகள் சேட ஜுரியின் தீர்மானத்திற்கு அமைய, உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.
போரின் போது பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத் தமிழர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள், வடக்கில் அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட மனித விரோதக் குற்றச் செயல்கள் போன்றவற்றை சிங்கள மொழியில் தெற்கில் தெரிவித்த ரவிராஜ், நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து போராடினார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த, தெற்கில் செயற்பட்ட போருக்கு எதிரான சக்திகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தமையே அவரது கொலைக்கு வழிவகுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.