கற்றலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் நான்காயிரம் கோடி குறைப்பு

0
Ivory Agency Sri Lanka

2021ஆம் ஆண்டுக்கான கல்விக்கான ஒதுக்கீடு 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நான்கு பில்லியன்களால் குறைக்கப்பட்டுள்ளமையால், அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக, இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று எச்சரித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வரவு செலவுத் திட்டத்தை கண்டித்து, தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது,

பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு 126 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள, இலங்கை ஆசிரியர் சங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை 167 பில்லியன் ரூபாய் எனத் தெரிவித்துள்ளது.

“இதற்கமைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் புறந்தள்ளப்பட்டு சுமார் 41 பில்லியன் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.”

வரவுசெலவுத் திட்டத்தில் கல்வி அபிவிருத்திக்கான எந்தவொரு சாதகமான திட்டமும் முன்வைக்கப்படவில்லை எனவும், கிராமப்புற பாடசாலைகளின் தொலைக் கல்விக்காக தொலைக்காட்சி பெட்டிகளை கொள்வனவு செய்ய 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நான்கு பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டியதோடு, நான்கு பல்கலைக்கழகங்களை 1000 மில்லியனுடன் ஆரம்பிக்க இயலுமா? எனவும் நவம்பர் 19ஆம் திகதியான நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொற்றுநோய் அச்சுறுத்தல் காலத்தில் கல்விக்கு நிதி இல்லை

நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்த வரவுசெலவுத் திட்டத்தில் ஆசிரியர் வளர்ச்சி மற்றும் கொரோனா தொற்றுநோயினால் வீழ்ச்சியடைந்த கல்வி நடவடிக்கைகளை மீளக் கட்டியெழுப்ப புதிய திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் தொழிற்சங்கத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 மற்றும் 2020 ஆகிய இரு வருடங்களில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை நினைவு கூர்ந்த ஜோசப் ஸ்டார்லின், 2020 மார்ச் 16 முதல் ஐந்து நாள் வேலை நிறுத்தத்திற்கு திட்டமிடப்பட்ட போதிலும், கொரோனா தொற்று காரணமாக மார்ச் 12ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டனர்

2021 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், தற்போதைய வரவு செலவுத்திட்டத்தில் இந்த பிரச்சினை குறித்து ஒரு வார்த்தையேனும் குறிப்பிடப்படாமல், ஆசிரியர்களின் அதிபர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் சங்கத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்விக்கு சிறியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதேவேளை, பாதுகாப்பு அமைச்சிற்கு 355 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியையும் உள்ளடக்குகையில், இது 440 பில்லியன் ரூபாய் என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. “இது முந்தைய வருடத்தை விட 12% அதிகரிப்பு.”

கல்வி மற்றும் சுகாதாரத்தை விட பெருந்தெருக்களுக்கு நிதி

கல்வி மற்றும் சுகாதாரத்தை விட பெருந்தெருக்கள் அபிவிருத்திக்கு, 330 பில்லியனுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைத் தொடர்பிலும் ஆசிரியர் சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

நாட்டில் தொற்றுநோய் நிலைமை இருந்தபோதிலும், சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 187 பில்லியனில் இருந்து 159 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளதாக என்று சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னதாக மூன்று முறை முன்மொழியப்பட்டும் அது வழங்கப்படாத பின்னணியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வுக்கான திட்டம் தொடர்பிலான அறிவித்தல் முன்மொழியப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

2016 – 2020ற்கும் இடையில் ஓய்வு பெற்றவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை, வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நிறைவேற்றுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இந்தத் தடவையும் அது நிறைவேற்றப்படவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய 1,724 பில்லியன் வரி வருவாய் எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அதில் 1,353 பில்லியன் ரூபாய்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் 80%ற்கும் அதிகமான வரிச்சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொருட்களின் விலை உயர்வை தவிர்க்க முடியாது எனவும், ஆசிரியர் சங்கத் தலைவர் எச்சரிக்கிறார்.

“ஜனவரி 1, 2020 முதல் சம்பள ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக அல்லது அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக வரவுசெலவுத் திட்டத்தில் எந்த வாக்குறுதியும் குறிப்பிடப்படாமல் அரச ஊழியர்கள் அலுவலக நேரத்திற்குப் பின்னர் வேறு வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.” என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எட்டு மணி நேர வேலைக்குப் பின்னர் மீண்டும் பணியாற்றி பணம் உழைக்குமாறு அறிவிப்பதானது பொதுச் சேவையை கடுமையாக அவமதிக்கும் செயல் எனவும், இந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக ஒரு ஐக்கிய போராட்டத்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை, எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments