ஜனாதிபதி, பிரதமரை பதவியில் இருந்து விரட்ட வேலை நிறுத்தம்

0
Ivory Agency Sri Lanka

மக்கள் கோரிக்கையை மீறி ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட ‘மொட்டு’ அரசாங்கம் இராஜினாமா செய்யக் கோரி தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவும், எதிர்வரும் மே தினத்தை அதற்கென ஒதுக்கிக்கொள்ளவும் தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை வர்த்தக, கைத்தொழில் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று (25) கூடிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் ஏப்ரல் 28ஆம் திகதி ஒன்றிணைந்த அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களின் தலைவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்தத் தினத்தன்று, அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்க உதவுமாறு ஜனாதிபதி மகாநாயக்கர்களிடம் கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை உடனடியாகக் கலைத்து, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு கோரி, ஏப்ரல் 4ஆம் திகதி பிரதம தேரர்களால் அனுப்பப்பட்ட கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இது அமைந்திருந்தது.

“நீங்கள் கூறியது போல், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்திலும் உங்களின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளை மரியாதையுடன் எதிர்பார்க்கிறேன்.” என எப்ரல் 21 திகதியிட்ட கடிதத்தில் ஜனாதிபதி கூறினார்.

சுகயீன விடுப்பு அல்லது பணி விடுப்பு என்ற வகையில் தொழிற்சங்கத்தின் விருப்பத்திற்கு அமைய ஏப்ரல் 28 அன்று தொழிற்சங்க நடவடிக்கைக்கு பங்களிக்க முடியும்.

இந்நாளில் மேல்மாகாண தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பேரணியாக சென்று கொம்பனித் தெரு, பித்தளை சந்தி, கொள்ளுப்பிட்டி வழியாக காலி முகத்திடல் போராட்ட மைதானத்தை நோக்கி பேரணியாக செல்ல தீர்மானித்துள்ளன.

ஏனைய மாகாணங்களில் உள்ள தொழிற்சங்க மற்றும் வெகுஜன அமைப்பு தலைவர்களின் உத்தரவின் பேரில் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்படும்.

அடையாள வேலைநிறுத்தத்தின் நோக்கங்கள் மற்றும் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளுக்கு விநியோகிக்கவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் நாடளாவிய ரீதியில் சுவரொட்டி பிரச்சாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தினத்தை நடத்த தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளும் தீர்மானம் மேற்கொண்டுள்ளன.

மே தின அணிவகுப்பு ஸ்டன்லி ஜேன்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகி காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் பேரணியாக நிறைவடையும்.

Facebook Comments