இலங்கையில் ஓராண்டு அதிகாரத்தை கோரும் தமிழ் கட்சி

0
Ivory Agency Sri Lanka

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அரசாங்கத்திற்கு ஒரு வருட ஆட்சியை வழங்குமாறு தமிழ் அரசியல் கட்சி ஒன்று சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

“இந்தத் தருணத்தில் சிங்கள மக்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழர் தரப்புக்கு ஆட்சியமைக்க ஒரு வருடம் கொடுங்கள். ஒரு வருடத்தில் இந்த நாட்டை உயர்த்துவோம். தமிழ், சிங்கள மக்களுக்கு சம அந்தஸ்து வழங்கி அதனைச் செயற்படுத்துவோம். அது எமது போராட்டத்தில் நிரூபணமாகியுள்ளது” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள டெலோ அலுவலகத்தில் வன்னி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன், கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என வடக்கு கிழக்கு மக்கள் தமது வாக்கு மூலம் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.

கோட்டாபயவும் மஹிந்த ராஜபக்சவும் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்து வெற்றியைக் கொண்டாடினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் திறமையால் எங்கள் போராட்டத்தை அழிக்கவில்லை. சர்வதேச சமூகத்தின் உதவியுடன் இது இடம்பெற்றுள்ளது. இன்று அது நன்றாக தெரிகிறது.”

“இன்று சிங்கள மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். நாங்கள் நடத்திய போராட்டம் சரியானது என்பதை இது காட்டுகிறது. இந்த போராட்டங்களின் போதும் அது பற்றிய கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்தச் சூழலை நமது போராட்டத்துக்குப் பயன்படுத்த வேண்டும்.” என டெலோ தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“இரத்தினபுரி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு விடுதலைப் புலிகள் உதவிகளை வழங்கியிருந்தனர். அந்த வரலாற்றை நாம் மறக்க முடியாது. இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும்.”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஆரம்பிக்கப்பட்ட ஜே.ஆர் காலத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக டெலோ தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எங்கள் இளைஞர்கள் இன்றும் சிறைகளில் உள்ளனர். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி அவர்களின் தாய்மார்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எமது மக்களின் காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்படுகின்றன.”

“ஒருவருக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டால், அது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் இருப்பு தமிழ் மக்களின் பலம் மீதான ஆளுங்கட்சியின் அபிலாஷைகளுக்கு அதிக கவனம் செலுத்தும் என பலர் தெரிவித்தனர். எனினும் அண்மைக்கால வரலாறு அவ்வாறு இல்லை என்பதையே செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டுகிறார்.

“அண்மையில் மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளித்தார். ஆனால் தமிழ் மக்கள் சார்பாக அதிகாரத்தை செலுத்துவதற்கு அவர் செயற்படவில்லை.”

“கிளிநொச்சியில் உள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகர் விடுதலை செய்வதாக உறுதியளிக்கப்பட்டு இன்று வரை விடுவிக்கப்படவில்லை. சில மாற்றங்களைச் செய்த போதும் இன்று வரை எதுவும் செயற்படுத்தப்படவில்லை.”

“எங்களுடைய வாக்குகளால் ஜனாதிபதி பதவிக்கு வந்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்தும் தமிழ் மக்கள் குறித்து சிறிதளவும் சிந்திக்காத சந்திரிகா பண்டாரநாயக்கா இன்று தமிழ் மக்கள் சார்பாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். அவர் ஜனாதிபதியாக இருந்த போது நிறைவேற்று அதிகார முறைமையை தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தினார்.”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கும் சிங்களச் சகோதரர்களுக்கு இதனை நிபந்தனையாக வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

“கைதிகளின் விடுதலை, காணாமற்போனோருக்கான நீதி மற்றும் காணி அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்றவற்றின் எழுத்து மூலமான உறுதிப்படுத்தல் எமக்கு அவசியமாகும்.”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தமிழ் பேசும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினூடாக ஏனைய கட்சிகளின் ஆதரவு தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை பரிசீலித்து வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று தலைவர்களான விக்னேஸ்வரன், பிரேமச்சந்திரன் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் ஏற்கனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

“ஜனாதிபதி வீட்டுக்குப் போவதும், ராஜபக்ச குடும்பம் வீட்டுக்குப் போவதும் எங்களின் கோரிக்கையல்ல. நீண்ட நாட்களாக அவற்றை நிராகரித்து வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவாதம் அளிப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.”

Facebook Comments