தமிழ் மக்களுடன் இணையுமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகோள்

0
Ivory Agency Sri Lanka

நான்கு தசாப்தங்களாக நிலவி வரும் இந்த அமைப்பை மாற்றியமைக்கவும், அடக்குமுறைக்கு எதிராக போராடும் தமிழ் மக்களின் குரலுக்கு இடமளிப்பதற்கு தென்பகுதி மக்கள் தம்முடன் கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தை கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம் வலியுறுத்தியுள்ளது.

“30-40 வருடங்களாக வடக்கு, கிழக்கில் உள்ள மக்களும் தற்போதைய முறையை மாற்றி அடக்குமுறைகளில் இருந்து விடுபட முயற்சித்து வருகின்றனர். இன்று தென்னிலங்கை மக்களும் அதே அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதை நாம் ஆழமாகப் புரிந்துகொண்டு தமிழ் மக்களின் குரலுக்கு இடம் கொடுக்க வேண்டும், இந்த ஜனாதிபதியை ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து உரிமைகளை வென்றெடுக்க நாம் இருவரும் எங்கள் சொந்த அடையாளங்களுக்குள் ஒன்றாக நிற்க வேண்டும், ” என் கிறிஸ்தவ உழைக்கும் சகோதரத்துவ இயக்கக் குழு உறுப்பினர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் பல தசாப்தங்களாக உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ அமைப்பு, வீதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என்று கூறுகிறது.

“ஆட்சியாளர்கள் தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், அந்த வாக்கைப் பயன்படுத்திய அதே மக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களை பதவி விலகச் சொல்கிறார்கள். எனவே இந்த ஆட்சியாளர்கள் அந்த மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும், அந்த அதிகாரம் இன்று போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கையைச் சார்ந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் ஏழை மக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்கள் வாக்கு மூலம் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் ஒடுக்கப்படுவது நியாயமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்னிலங்கையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம், அதனை மேலும் பலப்படுத்துவதற்கு சில அரசியல் தலையீடுகள் தேவை என நம்புகிறது.

“இந்த நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண விரும்புகிறோம். ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு நாடாளுமன்றமும் பதவி விலகுவதே ஒரே தீர்வு. பின்னர் அனைத்துக் கட்சிகளின், குறிப்பாக நாட்டிலுள்ள புத்திஜீவிகளின் பிரதிநிதித்துவத்துடன் இடைக்கால அரசாங்கத்திற்குச் செல்லுங்கள், இந்த பாரிய அரசியல் மோதலைத் தீர்க்க கூடிய வகையில் விரைவில் தேர்தலை நடத்துங்கள், ” என கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவத்தின் கொழும்பு கிளையின் செயற்பாட்டாளர் ரோல்ஸ்டன் வைமன் கூறியுள்ளார்.

“வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தென்னிலங்கை மக்கள் உணராததால், வடக்கு, கிழக்கு மக்களின் குரல்கள் இன்று காலிமுனகத்திடல் மைதானத்தில் கேட்கவில்லை.”

“1971ஆம் ஆண்டு எழுச்சியின் போது கைது செய்யப்பட்ட இளைஞர்களை பிரதமர் சிறிமாவோ விடுவிக்க வேண்டும் என கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம் தெளிவாகக் கோரியிருந்தது, இன்றும் தமிழ் கைதிகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட முஸ்லிம் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”

Facebook Comments