வீடுகள் தீக்கிரையான அரசியல்வாதிகளுக்கு உடனடி நிவாரணம், தோட்டத் தொழிலாளர்களுக்கு இல்லை

0
Ivory Agency Sri Lanka

அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டால் உடனடி நிவாரணம் வழங்கப்படுகின்ற நிலையில்,
நீண்ட நாட்களாகியும் தோட்டப் பகுதிகள் தீக்கிரையான வீடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தோட்டத் தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

“நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரிக்கப்பட்ட வீடுகளுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் லயன் வீடுகள் தீப்பிடித்து பல வருடங்கள் கடந்தும் இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. லயன் வீடுகளை இழந்தவர்கள் கோவில்களில் உள்ளனர்’ என, ப்ரொடெக்ட் தொழிற்சங்கத்தின் ஹட்டன் பிராந்திய அமைப்பாளர் எம்.கருப்பையா தெரிவித்துள்ளார்.

மே 21ஆம் திகதி சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், தோட்டத் தொழிலாளர்களைப் போன்று வீடற்ற எந்த அரசியல்வாதியும் கோவில்களிலோ, ஆலயங்களிலோ, தேவாலயங்களிலோ தங்கியிருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டு உரிமை கிடையாது. நில உரிமை இல்லை. சம்பளம் கிடையாது. வேலை இல்லை. அவர்களை பற்றி அமைச்சர்கள் பேசுவதே இல்லை. பெருந்தோட்டங்களில் இருந்து போனவர்களும் பேசுவதில்லை. பிரதமர் மாறினாலும், ஜனாதிபதி மாறினாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லை.”

டிசம்பர் 15 சர்வதேச தேயிலை தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபை மே 21ஐ மே தேயிலை தினமாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு தெற்காசிய நாடுகளில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவிக்க பல அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் நடவடிக்கை எடுத்துள்ளதாக, பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள காணி உரிமைகள் தொடர்பில் செயற்படும் எஸ்.டி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

“இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பாலும் இதே பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அந்நியச் செலாவணியை தேடித்தரும் இந்தத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவர்களின் உரிமைகள் வழங்கப்படவில்லை. “சூம்” ஊடாக, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடி ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு மனுவை வழங்கினோம்.”

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய நிவாரணத் திட்டம் விசேட கவனம் செலுத்த வேண்டுமென கணேசலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் பாதுகாப்பு இல்லை. இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தோட்ட அதிகாரிகள் தொழிலாளர்களின் வேலை நாட்களை மட்டுப்படுத்தியுள்ளனர். இதனால் பலர் வேலை இழந்துள்ளனர்.”

Facebook Comments