பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை மீட்டுப்பது குறித்த கலந்துரையாடல்களுக்கு அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகைத் தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், நாட்டிற்குத் தேவையான உதவி கிடைக்கப்பெறுவதற்கான சாத்தியங்கள் இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்ததும், இலங்கையில் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து அமெரிக்கா அவதானம் செலுத்துமென அமெரிக்க இராஜாங்க செயலாளர், தன்னுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்ததாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சவால்கள் தொடர்பில் பிரதமர் கலந்துரையாடியதாக தகவல் வெளியிட்டுள்ள இராஜாங்கத் திணைக்களம், இராஜாங்கச் செயலாளர் அந்தோணி ஜே.பிளிங்கன் அரசியல் சீர்திருத்தத்தம் தொடர்பில் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
“இந்த சவாலான நேரத்தில் இலங்கை மக்களுக்கான தனது அர்ப்பணிப்பை இராஜாங்க செயலாளர் மீண்டும் உறுதிப்படுத்தினார். ஜனநாயக ஆட்சி மற்றும் மனித உரிமைகள் உட்பட அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.” என இராஜாங்க திணைக்களத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
மே மாதம் இலங்கையுடன் நடத்தப்பட்ட தொழிநுட்ப கலந்துரையாடல்களை முன்னிறுத்தி கலந்துரையாடுவதே தூதுக்குழுவினரின் விஜயத்தின் நோக்கம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்லுமாறு வற்புறுத்திய காலி முகத்திடலில் ஈடுபட்டவர்கள் மீது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் தாக்குதல் நடத்திய தினத்தில் ஆரம்பமான, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மற்றும் இலங்கையின் நிதி அதிகாரிகளுடனான தொழில்நுட்ப கலந்துரையாடல் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று இரண்டு வாரங்களில் முடிவுக்கு வந்தது.
“இலங்கையின் கடன் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளமை மதிப்பிடப்பட்டுள்ளது. இதுத் தொடர்பில் நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். எந்தவொரு திட்டமும் எங்கள் சபையால் அங்கீகரிக்கப்படுவதற்கு இலங்கையின் கடன் தாங்கிக்கொள்ளக் கூடிய அளவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.”என என்று நாங்கள் முன்பே கூறியுள்ளோம்” என நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா கியோகேவா கடந்த செவ்வாய்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடியபோது,
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக நிதியத்தின் பேச்சாளர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடனை மீளச் செலுத்துவதற்கு அடுத்த ஆறு மாதங்களில் இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், நாட்டின் கையிருப்பை அதிகரிக்க மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இவ்வளவு குறுகிய காலத்தில் பணம் கிடைக்கும் என சர்வதேச நாணய நிதியம் உத்தரவாதம் அளிக்கவில்லை.
“இந்த சவாலான நேரத்தில் இலங்கை மக்களுக்கான தனது அர்ப்பணிப்பை இராஜாங்க செயலாளர் மீண்டும் உறுதிப்படுத்தினார். ஜனநாயக ஆட்சி மற்றும் மனித உரிமைகள் உட்பட அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.” என இராஜாங்க திணைக்களத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
கடன் மீளச் செலுத்துவதற்கான ஒரு நிலையான நிதித் திட்டம் இலங்கையால் வழங்கப்பட வேண்டும்.
கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களின் சேவைகளை நாடியுள்ளது.
நெருக்கடியை சமாளிக்க உதவும் எந்தவொரு நிதித் திட்டமும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் மாத்திரமே தங்கியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.