தற்போது உருவாகியுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் எனவும், ஆறு மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை அமைத்து தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளன.
மேலும் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றிய போராட்டக்காரர்களுக்கு அடுத்த அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் கருத்தாக அமைந்துள்ளது.
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம், கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் வெளியிடப்பட்ட முன்மொழிவுகள் எதிர்கால அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றன.
6 மாத இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 15 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும், மாதாந்த சம்பளம் தவிர்ந்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகல கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் முன்மொழிந்துள்ளன.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்தல், எரிபொருள், எரிவாயு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை நீக்குதல், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள், தொழில்துறை மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாட்டின்றி வழங்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், சுயதொழில், விவசாயம் மற்றும் மீன்பிடிக்கடன் மற்றும் குத்தகை வட்டியை செலுத்த ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுச் சொத்தை விற்பனை செய்தல் மற்றும் குத்தகைக்கு வழங்குவதை கட்டாயப்படுத்தும் ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டும், தொழிலாளர் உரிமைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை குறைக்கும், அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் புதிய சட்டத்தை இரத்து செய்ய வேண்டும், தனியார் நிறுவன ஊழியர்களை வாக்களிக்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும். ஓய்வூதியம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும் ஏனைய அத்தியாவசிய வசதிகளை வழங்குவதற்கும் உள்ள சட்டத் தடைகளை நீக்க வேண்டும்.
கோட்டாகோகமவின் பிரதிநிதித்துவம்
அரச மற்றும் சிவில் ஆட்சியில் மக்கள் போராட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தரப்பின் பங்களிப்பைப் பெறுவதற்காக, தொழிற்சங்கங்கள், மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழில் நிபுணர்கள் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகளின் பங்கேற்புடன் சட்ட அதிகாரம் கொண்ட குடிமக்கள் சபையை நிறுவ முன்மொழிந்துள்ளனர்.
இதனைத் தவிர, அனைத்து அரச மற்றும் அரை அரச நிறுவனங்களும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்களின் மேற்பார்வையின் கீழ் சட்டப் பொறிமுறையை உருவாக்குதல், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்,
அறக்கட்டளை நிதிகள் போன்ற உழைக்கும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் விடயங்களைத் திருத்துவதில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்புகளைக் கொண்ட நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறைக் குழுவையும் இது முன்மொழிகிறது.
மக்கள் போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் நீதி வழங்குவதற்கான விரைவான வேலைத்திட்டத்தை முன்வைக்கும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட அனைத்து குடிமக்களையும் விடுவிக்குமாறு கோருகிறது.