வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த எவரும் பதிவு செய்யப்படவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
தமிழ்மிரர் ஊடகவியலாளர் பி. நிரோஷ் மூன்று வருடங்களுக்கு முன்னர் கோரிய தகவல் மறுப்புக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீடு, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவால் நவம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
போரின் இறுதி நாட்களில், யுத்த வலயத்திலிருந்து வெளியேறிய இலட்சக்கணக்கான மக்களில், பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரின் அறிவிப்பை ஏற்று அவர்களிடம் சரணடைந்தனர்.
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் புள்ளிவிபரங்களுக்கு அமைய அவர்களில் குழந்தைகளும் பெண்களும் இருந்துள்ளனர்.
இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களா என்பது தமக்குத் தெரியாது எனக் கூறி கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ் ஊடகவியலாளரின் தகவல் கோரிக்கையை இராணுவம் நிராகரித்திருந்தது.
“போர் பிரதேசத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர். அவர்கள் விடுதலைப் புலிகளா அல்லது பொதுமக்களா என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பொறுப்பேற்ற போது பதிவு செய்யவில்லை. “எங்களிடம் வந்தவர்களை நாங்கள் பேருந்துகளில் அழைத்துச் சென்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் கீழ் இருந்த முகாம்களில் தங்க வைத்தோம். அதன் பின்னர் புனர்வாழ்வு பணியகமே அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தது.” என இராணுவத்தினர் சாட்சியமளித்ததாக தமிழ்மிரர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவம் அளிம்ம தகவல்கள், அரசு அவ்வப்போது தெரிவித்த கருத்துக்களுக்கு முரணாக உள்ளது.
2018ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, விடுதலைப் புலிகளின் அம்பாறை மட்டக்களப்பு தளபதி ரமேஷ் எனப்படும் தம்பிராஜா துரைராஜசிங்கம் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தார்.
இராணுவக் காவலில் உயிருடன் இருக்கும் கர்னல் ரமேஷிடம் இராணுவத்தினர் எவ்வாறு விசாரணை நடத்துகிறார்கள், பின்னர் அவரை எப்படிக் கொன்றார்கள் எனற விபரங்கள் அடங்கிய காணொளி காட்சிகளை செனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களைக் உள்ளடக்கிய ஜேடிஎஸ் அமைப்பினால் செனல் 4விற்கு வழங்கிய இலங்கை இராணுவம் மீதான முதலாவது யுத்தக் குற்றச்சாட்டைக் காட்டும் காணொளி, இராணுவச் சீருடை அணிந்த ஒரு குழுவினர் கைது செய்யப்பட்ட பலரைச் சுட்டுக் கொன்றதைக் காட்டுகிறது.
அந்த காணொளி நம்பகத்தன்மை ஐ.நா நிபுணர்கள் குழுவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
‘கொடூரமான மற்றும் அதிர்ச்சியூட்டும்’ போர்க்குற்றங்களுக்கு சாட்சியமளிப்பதாகக் கூறிய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு (LLRC) அதன் நம்பகத்தன்மையை நிலைநாட்ட சுயாதீன விசாரணைக்கு பரிந்துரை செய்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த பரிந்துரையை இதுவரை எந்த அரசும் நடைமுறைப்படுத்தவில்லை.
வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலிகள் அமைப்பின் நடேசன் மற்றும் புலிதேவன் உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டமை போர்க்குற்றம் எனவும் சுதந்திரமான விசாரணை தேவை எனவும் ஐக்கிய நாடுகள் சபையும் பரணகம ஜனாதிபதி ஆணைக்குழுவும் வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை, பல காணொளிக் காட்சிகளில், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்படுவதை வெளிப்படுத்தியுள்ளன.
போர்க்களத்தில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறிய, ஊடகவியலாளர் இசைப்பிரியா மற்றும் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் ஆகியோர் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட விடயம் ஜேடிஎஸ் வெளியிட்ட உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் வெளிப்படுத்தியிருந்தன. பின்னர் இருவரும் கொல்லப்பட்ட புகைப்படங்களையும் ஜேடிஎஸ் வெளியிட்டது. போரின் போது பிரபலமடைந்த மற்றுமொரு புகைப்படத்தில், முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, விடுதலைப் புலிகள் குழுவை காவலில் வைத்திருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.
http://www.jdslanka.org/index.php/news-features/human-rights/592-sri-lanka-.
2017ஆம் ஆண்டில் ஒரு அறிக்கையை வெளியிட்ட சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், (ITJP) கைது செய்யப்பட்ட அல்லது ஒப்படைக்கப்பட்ட அல்லது சட்டவிரோதமாக சித்திரவதை அறையில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் உட்பட சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தமிழ்க் கைதிகள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய முன்னாள் இராணுவத் தளபதி உட்பட ஐந்து பேர் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருந்தது.
வவுனியா ஜோசப் முகாமின் கட்டளை அதிகாரிகளாக இருந்த ஜகத் ஜயசூரிய, கமல் குணரத்ன, சுமேத பெரேரா, பொனிபஸ் பெரேரா மற்றும் ஜீவக ருவன் குலதுங்க ஆகியோர் அந்த ஐந்து தளபதிகளாவர்.
(சிங்கள அறிக்கை)
https://itjpsl.com/assets/ITJP_Joseph_camp_report_SIN_1.1.pdf
ஊடகவியலாளர் நிரோஷ் சார்பில் ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம், இராணுவத்தின் கூற்றை நிராகரித்ததுடன், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்தமைக்கான ஆதாரங்களை முன்வைத்ததாக தமிழ்மிரர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவம் கூறும் தகவல்கள் புனர்வாழ்வு பணியகத்தில் இல்லை என சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் வலியுறுத்தியுள்ளார்.
மறைக்க எதுவும் இல்லை
இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த ஆணைக்குழு, “இந்தப் விடயங்களை அரசாங்கமே வெவ்வேறு வழிகளில் சர்வதேச அமைப்புகளிடம் முன்வைத்துள்ளது. எனவே, 2009ஆம் ஆண்டு நடந்த சம்பவங்கள் குறித்து இப்போது மறைப்பதற்கு எதுவும் இல்லை.” என இராணுவத்திடம் தெரிவிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்தமை தொடர்பிலான தகவல்களை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ள ஆணைக்குழு, எழுத்து மூலமான பதிலை வழங்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி இதுத் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், யுத்தத்தின் இறுதி நாட்களில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு பலர் காணாமல் போயுள்ளதாக, 2009ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கு தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காணாமல் போனோர் தொடர்பான அரசாங்க அலுவலகத்தின் (OMP) அறிக்கைக்கு அமைய, அந்த எண்ணிக்கை சுமார் இருபதாயிரம்.
செனல் 4 வீடியோவின் சிங்கள பதிப்பு இங்கே