அதிகாரத்தைக் கைப்பற்ற “ஒவ்வொரு அரசாங்கமும் படுகொலை செய்தது” (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

ஆட்சியைப் பெறுவதற்கும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் மக்களைக் கொன்று காணாமல் ஆக்குவது நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசியல் கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக, நாட்டின் சிரேஷ்ட மனித உரிமை ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார்.

“இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல், தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமில்லாமல், இந்த மக்களின் மரணத்தையும் காணாமல் போதலையும், அதிகாரத்தை பெற்றுக்கொள்ள அல்லது பாதுகாத்துக்கொள்ள ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டன”

இலங்கையில் காணாமல் போனவர்களின் நினைவாக சீதுவ ரத்தொலுவ நினைவிடத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஒன்றியத் தலைவரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பிரிட்டோ பெர்னாண்டோ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“அன்புக்குரியவர்களை நினைவுகூருவோம்! போராட்டத்தை கைவிடாமல் மீண்டும் நிகழ்வதைத் தடுப்போம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் 31ஆவது ஆண்டு நினைவு தினம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில், உரையாற்றிய பிரிட்டோ பெர்னாண்டோ, காணாமல் போனவர்களுக்கு சமூக அதிர்ச்சியை உருவாக்க கடந்த காலத்தில் சாத்தியமில்லாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

காணாமற்போனவர்களுக்காகப் போராடுபவர்கள் தொடர்பில் சமூகம் இன்னமும் குறுகிய கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலும், தெற்கிலும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் சிறு விசாரணை கூட இல்லை எனவும், அவர்களுக்கான இறப்பு சான்றிதழ்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டோ பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள் இறந்தது எப்படி உறுதியானது என அவர் கேள்வி எழுப்பினார்.

“யார் தீர்மானித்தது, எங்கள் கணவர், எங்கள் சகோதரன், எப்படி இறந்தான்? எப்படி காணாமல் போனார்? மரணத்திற்கான காரணம்? காணாமல் போய் ஒரு வருடம் ஆன பிறகு இறந்துவிட்டார் என்று நினைக்க முடியுமா?”

30 வருட போராட்டத்தின் பின்னர், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை பெற்றுக் கொள்ள முடிந்துள்ள போதிலும், அந்த அலுவலகத்தினாலோ அல்லது இழப்பீட்டு அலுவலகத்தினாலோ எந்தப் பயனும் இல்லை என, காணாமல் போனோர் குடும்பங்களின் ஒன்றியத் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2018 பெப்ரவரி 28ஆம் திகதி மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட அலுவலகம் தொடர்பில் உறவினர்கள் கோபமடைந்துள்ளதாக அதன் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸும் ஒப்புக்கொண்டுள்ளார்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் வரை மாதாந்தம் 6,000 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்குவதற்காக 2019 ஏப்ரலில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டோ பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

செப்டம்பர் 18, 2019 அன்று, காணாமல் போனதாக சான்றளிக்கப்பட்டவர்களுக்கு தொகையை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையில் 153 குடும்பங்களுக்கு (11 மில்லியன் ரூபா) அந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்த பிரிட்டோ பெர்னாண்டோ, ஒதுக்கப்பட்ட தொகையில் 489 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலுத்தவில்லை என மேலும் சுட்டிக்காட்டினார்.

“இந்த அரசாங்கம் எங்களுக்கு ஐந்து சதத்தையேனும் தராது”

31 வருட தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்ததன் நோக்கம் குறித்து பிரிட்டோ பெர்னாண்டோ விளக்கமளித்தார்.

“உண்மையை வெளிப்படுத்தி, நீதி வழங்குவதன் மூலமும், இழப்பீடு கோருவதன் மூலம், இந்த நாட்டின் ஆட்சியைப் கைப்பற்ற நினைக்கும் தரப்பால் மாத்திரமே காணாமல் ஆக்கப்பட்டதை குற்றமாக்கி, காணாமல் போதல் நடக்காத வகையில் மக்களின் மனநிலையை மாற்றியமைக்க முடியும். அதனால்தான் நாங்கள் உண்மையைக் கோருகிறோம். அதனால்தான் நாங்கள் நீதியைக் கோருகிறோம். அதனால்தான் நாங்கள் இழப்பீடு கோருகிறோம்.”

இலங்கையில் காணாமற்போனவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அரசாங்கப் பாதுகாப்புப் படையினர்தான் காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments