தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சீன தூதுவரை சந்தித்தமை குறித்து போரில் காணாமல் போனோர் குடும்பங்கள் கேள்வி

0
Ivory Agency Sri Lanka

போரின் போது காணாமல் போன அல்லது சரணடைந்த அவர்களது உறவினர்களைத் தேடும் தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அண்மையில் சீனத் தூதுவரை இரகசியமாகச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரிடும் கேள்வி எழுப்பியுள்ளது.

எம்.பி.க்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஆர்.சாணக்கியன் ஆகியோர், “தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் அல்லது கூட்டணியில் உள்ள ஏனைய உறுப்பினர்களுக்குத் தெரிவிக்காமல், தங்கள் நலனுக்காக தூதுவரைச் சந்தித்துள்ளதாக,” சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ராஜ்குமார் உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குற்றம்சாட்டினார்.

“தமிழ் மக்கள் தொடர்பான மனித உரிமை பிரச்சினைகள் அல்லது வேறு எந்த பிரச்சினைகளுக்கும் சீனா எந்த நேரத்திலும் ஆதரவாக குரல் கொடுத்ததில்லை.

தமிழர் தாயகத்தில் இருந்து சீனா முற்றாக வெளியேற வேண்டும் என்றும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர் தாயகத்தில் சீன திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரி வருகிறோம். தமிழ்த் தேசியம் பேசும் மற்றும் தமிழ் மக்களைப் பற்றிப் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனத் தூதரை இரகசியமாகச் சந்திப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என ராஜ்குமார் மேலும் கூறியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியை சீர்திருத்த முடியாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்க முடியாவிட்டால், அவர் பதவி விலக வேண்டும் என சங்கம் கோரியுள்ளது.

“வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து கொழும்பை தளமாகக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகளை வெளியேற்ற வேண்டிய நேரம் இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து நாங்கள் வெட்கப்படுகிறோம்”

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூதுவர்களை சந்திப்பது இயல்பானது எனினும், சந்திப்பு குறித்த விபரங்கள் பொதுவாக வெளிவரும், இரு எம்.பி.க்களும் சீன தூதரகத்திற்கு சென்றதை ஊடகங்கள் கசியவிட்ட பின்னரும், அதை வெளியிடாமல் மௌனம் காத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனும் கருத்து வெளியிட்டுள்ளார்.

“எம்.பி.க்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை, ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், எங்கள் எம்.பி.க்கள் இருவர் சென்று அவர்களை இரகசியமாக சந்தித்தது தான்” என அவர் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

சீனத் தூதுவருடனான சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில், மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.

Facebook Comments